அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் அதிமுகவை விமர்சித்து குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்ந்தால் 100 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்று நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக போன்ற பெரிய கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்து, தங்களுடைய அரசியல் இலக்கை அடைவதற்கு பாஜக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதிமுகவுக்கு எங்கே போனது புத்தி என்று தான் தொண்டர்கள் கேட்பார்கள். கல்லை வீசியது அமித்ஷாவாக இருக்கலாம். அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, அதிமுக தலைமை கழகம் பெயரிலேயே பதிலடி கொடுத்திருக்க வேண்டும். கூட்டணி அறிவிப்பின்போது எடப்பாடி என்று சொன்ன அமித்ஷா, அதன் பிறகு திட்டமிட்டே அந்த பெயரை தவிர்த்து வருகிறார். அமித்ஷாவினுடைய பேச்சு என்பது அதிமுகவின் கொள்கை சார்ந்த விஷயமாகும். இதற்கு செல்லூர் ராஜுவோ, ராஜேந்திர பாலாஜியோ பதில் அளிக்க அதிகாரம் கிடையாது. இதற்கு பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா அதிகாரமும் உள்ளது.
அமித்ஷா சொல்லாததை எல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி, நிருபர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இன்றைக்கு அமித்ஷாவின் பேட்டி தமிழில் வந்திருக்கிறது. என்.டி.ஏ தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவார். பாஜக அந்த கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் என்று அறிவித்துவிட்டாரா? அதிமுகவை பயந்து பாஜகவிடம் அடகு வைத்து விட்டீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். அது பொய் என்று நிரூபிக்க அடுத்த அடுத்த வாய்ப்புகளை நீங்கள் தவறவிட்டால், அது உண்மை என்று ஆகிவிடும். பிறகு ஆர்.எஸ்.பாரதி அரசியல் நோக்கத்துடன் விமர்சிக்கிறார் என்று எப்படி சொல்வார்.
கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டு அரசியலுக்கு சரிபட்டு வராது என்று வைகைச்செல்வன் சொல்லியுள்ளார். அது முழுக்க முழுக்க உண்மையாகும். முன்கூட்டிய சொன்னால் மக்கள் மத்தியில் எடுபடாது. கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும். ஒரு நாளிதழில் வெளியாகி உள்ள செய்தியில், இந்த விவகாரத்தை கண்டுக்கொள்ளாமல் போய்விடலாம் என அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளனர். அப்படி கண்டுக்கொள்ளாமல் போனால் உங்கள்
மீது மண்ணை போட்டு மூடிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள். மவுனமாக இருந்தால் எடப்பாடிக்கும் நல்லது அல்ல. அதிமுகவுக்கும் நல்லது அல்ல.
அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார் என்று அமித்ஷா சொல்கிறார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடியின் பெயரை சொல்லாமல் தவிர்க்கிறார் என்றால் ஏதோ ஒரு உள்குத்து உள்ளது என்றுதான் அர்த்தம். எடப்பாடி தான் அதற்கு உஷாராக வேண்டும். இது அதிமுக – பாஜக கூட்டணிக்கு எந்த வகையிலும் பலன் கிடையாது. எந்த அதிமுக தொண்டனும் உற்சாகமாக வேலை பார்க்க மாட்டான். உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்க வில்லையோ. அவர்தான் பொதுச் செயலாளர், அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர். இதை தினகரனே ஒப்புக்கொண்டு விட்டார். பாஜக ஏதேனும் சில்மிஷம் செய்து எடப்பாடி பெயரை சொல்ல தயங்கினால், அது அந்த கூட்டணிக்கு நல்லதல்ல.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உடன் கூட்டணி என்று அறிவிக்கிறார்கள். கூட்டணிக்கு தலைவரே அவர் தான் என்று சொல்கிறபோது, அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எல்லோருக்கும் தெரியும். அப்போது எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லாததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறது. எடப்பாடி உஷாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் எதையோ இழக்க தயாராகி விட்டார். அந்த பயம், நெருக்கடி காரணமாக என்று புரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடியின் செயல் மிகவும் துரதிர்ஷ்டவசமாக உள்ளது. இது எதிர்கால அதிமுகவுக்கு நல்லது அல்ல.
அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்று சொன்னது. தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்பாக நமக்கும் சேர்த்து தேர்தல் வேலை பாக்கின்ற அந்த அதிமுகவை சீண்டுவது போல உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு ஆகியவை திமுகவுக்கு சாதகமானதுதான். இந்து முன்னணி மாநாட்டில் அண்ணாவை அதர்மத்தின் அடையாளமாகவும், போலி திராவிடம் என்று காட்டுகிறார்கள். அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வருவார் என்றால் X அல்லது Y முதலமைச்சராக வருவார் என்பது அதில் மறைந்திருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்தால் திமுக மீண்டும் வர வேண்டும் என்றுதான் பாஜக நினைக்கிறது. இந்த குழப்பம் தொடர்ந்ததால் 100 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.