பீகாரில் ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளதால் எந்நேரத்திலும் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பீகாரில் என்.டி.ஏ கூட்டணியில் வெடித்துள்ள மோதல் தொடர்பாக ஊடகவியலாளர் புன்னைவளவன் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியுள்ளதாவது: பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. சிராக் பாஸ்வானை பாஜக பேச வைக்கிறதா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. நிதிஷ்குமாரின் ஆதரவில் தான் மோடியே பிரதமராக இருக்கிறார் என்கிறபோது, அவரை ஏன் பலவீனப்படுத்த பார்க்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. அப்போது பீகாரில் ஆட்சியை நடத்தக்கூடிய இடத்தில் தாங்கள் இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறார்கள். 1989ல் ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சி இருந்தபோது சிராக் பாஸ்வானின் தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். மறுபுறம் தற்போதைய முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் அவர்களுக்குள் இருந்த நெருக்கம் சிராக் பாஸ்வானுக்கும், நிதிஷ்க்கும் இல்லை. கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாரை மூன்றவாது இடத்திற்கு தள்ளிய பெருமை சிராக் பாஸ்வானையே சேரும். மோடியும் – அமித்ஷாவும், நிதிஷ்குமாரை கூட்டணியில் வைத்தே காலி செய்வதற்காக சிராக் பாஸ்வானை இறக்கினார்கள்.
கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷும், பாஜகவும் ஆளுக்கு பாதி இடங்களை பிரித்துக்கொண்டு போட்டியிட்டனர். சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, தனியாக போட்டியிட்டது. தன்னை மோடிக்கு அனுமான் போல இருப்பேன் என்று கூறிய பாஸ்வான், நிதிஷ் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் வேட்பாளர்களை நிறுத்தினார். இதன் மூலம் பெரிய அளவில் வாக்குகளை உடைத்தார். இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதலாவது பெரிய கட்சியாக தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி வந்தது. இரண்டாவதாக பாஜகவும், 3வது பெரிய கட்சியாக நிதிஷின் ஜேடியு வந்தது. நிதிஷ்குமாருக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு காரணம் பி டீமாக சிராக் பாஸ்வானை இறக்கி விட்டதுதான் என்ற விமர்சனத்தை அந்த கால கட்டத்திலேயே அரசியல் பார்வையாளர்களை வைத்தனர். அதனால் தான் ஒன்றரை வருடத்திலேயே நிதிஷ் கூட்டணியை உடைத்துக்கொண்டு வந்து, ஆர்ஜேடி உடன் கூட்டணி ஆட்சி அமைத்தார்.ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர் பாஜக கூட்டணிக்கு போய்விட்டார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக சிராக் பாஸ்வான் கருத்துக்களை கூறி வருகிறார். பீகாரில் சட்டம்- ஒழுங்கு இல்லை, வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சிராக் குற்றம்சாட்டி வருகிறார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிராக் பாஸ்வானை, பிரதமர் மோடி கூப்பிட்டு இப்படி பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக அமைதி காக்கிறது. எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 102 இடங்களை நிதிஷுக்கும், 101 இடங்களை பாஜகவுக்கும், சிராக் பாஸ்வானுக்கு 20 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு எஞ்சிய இடங்களை தர திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது சிராக் பாஸ்வான் 243 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். சிராக் பாஸ்வானுக்கு எதிராக, என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜேடியு மற்றும் ஜித்தன் ராம் மாஞ்சி ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இதனால் பீகாரில் என்.டி.ஏ கூட்டணி உடைகிற இடத்தை நோக்கி செல்கிறது.
அதேவேளையில் பீகாரில் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து உள்ளனர். ராகுல்காந்தியும் – தேஜஸ்வியும் முன்னணியில் இருந்து வாக்காளர் உரிமை யாத்திரையை நடத்தி முடித்துள்ளனர். இதில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 70 இடங்கள் தரப்பட்டது. தற்போது 90 இடங்கள் வரை கேட்கப்படுகிறது. ஆர்.ஜே.டி 150 இடங்கள் வரையில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஆர்ஜேடி கடந்த முறை 144 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்றனர். அதேவேளையில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ஆர்.ஜே.டி, காங்கிஸ் கட்சிகளை தவிர்த்து, சிபிஐ, சிபிஎம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விஐபி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, பராஸ் பாஸ்வானின் எல்.ஜே.பி போன்ற 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 243 தொகுதிகள் என்று வருகிறபோது மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட குறைந்தபட்சம் 20 -30 இடங்களில் கூடுதலாக நிற்க வேண்டும். பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்படுகிறது. அப்போது குறைந்தபட்சம் 145 தொகுதிகளிலாவது நிற்க வேண்டும் என்கிற எண்ணம் சரியானது. எஞ்சி இருக்கும் 90 தொகுதிகளை தேஜஸ்வி எப்படி 7 கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பார் என்கிற கேள்வி எழுகிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியாகிய கருத்துக்கணிப்புகளில் பீகாரில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார்கள். தனிப் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்படுகிற நிலையில், பாஜக போட்டியிடுவதே 101 தொகுதிகள் தான். அப்போது, எப்படி 122 இடங்களில் வெற்றி பெற முடியும்? நிதிஷ்குமார் கட்சி இம்முறை 30 இடங்கள் கூட வராது என்றும் சொல்கிறார்கள். புதிய நபராக பிரசாந்த் கிஷோர், தனியாக சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறார். சிராக் பாஸ்வானை வைத்து நிதிஷ்குமார் கட்சியின் அந்திமத்தை பாஜக கணக்கு போடுகிறதா? அல்லது இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களின் ஆதரவுடன், என்டிஏ அரசை கலைப்பதற்கான வேலைகளை செய்வார்களா? இன்னும் சில மாதங்களில் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.