பா.ம.க-வுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக பாமகவினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். ராமதாஸ் தனது மகள் காந்திமதியை, கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். அன்புமணி, தனது ஆதரவாளர்களுடன் பாமகவுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அண்மையில் தேர்தல் ஆணையம் பாமகவின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்தது. 2026 ஆகஸ்டு வரை பாமக-வின் தலைவராக அன்புமணியே தொடருவார் என்றும், மாம்பழ சின்னத்துடன், பாமக சார்பில் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அவருக்குத்தான் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து மருத்துவர் ராமதாஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அன்புமணியின் பதவிக் காலம் ஏற்கெனவே முடிவடைந்து விட்டதாகவும், தாங்கள் தான் உண்மையான பாமக என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து, அன்புமணி தரப்பை அங்கீகரித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து ராமதாஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்றைய தினம் பாமகவுக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மினி புஷ்கர்ணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மருத்துவர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், 2025 மே 28 வரை அன்புமணி பாமகவின் தலைவராக நீடித்ததாகவும், அதன் பின்னர் ராமதாஸ் அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவத்தார். 3 ஆண்டுகள் மட்டுமே கட்சியில் தலைவராக இருக்க முடியும் என்ற விதிமுறைகள் உள்ள நிலையில் 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவை 2023ம் ஆண்டில் நடைபெற்றதாக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து பதவி காலத்தை 2026ம் ஆண்டு வரை உள்ளதாக அன்புமணி தேர்தல் ஆணையத்தில் கூறியிருக்கிறார் . அதேநேரத்தில் அன்புமணி வழங்கிய போலியான ஆவணங்களை ஏற்று தான் தேர்தல் ஆணையமும் அன்புமணி பாமகவின் தலைவர் என்ற உத்தரவை பிறப்பித்திருக்கிறது என வாதங்களை முன் வைத்தனர்.

கடந்த நவம்பர் 27ம் தேதி தேர்தல் ஆணையம் பாமகவின் நிறுவனரான ராமதாஸுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளதாகவும், ஒரு கட்சியில் இரண்டு பிரிவுகள் இருந்தால் இது தனிப்பட்ட பிரச்சினையாக கருதப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதில் தலையிட முகாந்திரம் இல்லை என்றதோடு இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல் பட்டுள்ளது என ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. அன்புமணி கட்சியின் தலைவராக இருப்பதாக கூறுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றதோடு, அன்புமணி தான் தலைவர் என அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர் ராமதாஸ் தரப்பு பாமக என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது என்றும், ஏனெனில் அதிகாரப்பூர்வமாக பாமக என்பது அன்புமணி தலைமை வைக்கக்கூடிய கட்சியே என தெரிவித்தனர். அந்த வகையில் ராமதாஸ் தரப்பு தொடர்ந்துள்ள ‘மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ என தெரிவித்தனர். மேலும் கட்சியின் அதிகாரம் மற்றும் பதவி தொடர்பாக வழக்கு தொடுக்க வேண்டுமேயானால் அது உரிமையியல் வழக்காக மட்டுமே தொடுக்க முடியும் என்றும், ராமதாஸ் தரப்பு தங்களை பாமக எனக் கூறிக் கொள்வது நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதாகவும் அன்புமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ராமதாஸ் தரப்பில் எதிர் வாதங்களை முன்வைத்தபோது, இந்த மனு விசாரணைக்கு உகந்தது தான் என்றும், போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து கட்சியின் தலைவர் என அன்புமணி கூறி வருவதாகவும், தலைவரின் அதிகாரம் இல்லாமல் எப்படி ஒரு பொதுக்குழுவை கூட்ட முடியும்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது நீதிபதி, தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ் தரப்பில் 2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து பாமகவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளதாக ராமதாஸ் தரப்பு தெரிவித்தது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியினருக்கு இடையே நிலவும் பிரச்சனையில் அரசியலமைப்பின் கீழ் தனி அமைப்பாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூற முடியாது என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து பாமக நிர்வாகிகள் தேர்தல் எப்போது நடைபெற்றது? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு, கடந்த 2022ல் தேர்தல் நடைபெற்றது என்றும், அப்போதே அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2025ம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் பாமக கட்சி தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2028 வரை ராமதாஸ் தான் தலைவராக இருக்கும் நிலையில் வேறு யாரும் கட்சியின் தலைவர் என உரிமை கூறினால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் ஒருவேளை தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் வந்தால் வேட்பாளர்களை அங்கீகரித்து யார்? கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு என்று தேர்தலுக்கு முன்பாக ஒரு பட்டியல் வெளியிடப்படும். தற்போது இந்த இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் இருதரப்பு கையெழுத்து போடுவதையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது, மாறாக கட்சியின் சின்னமும் முடக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் பிரச்சனை உள்ளது என்றால் இருவரும் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்றும், கட்சியின் தலைவர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுப்பதில்லை, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையிலே முடிவுகளை எடுப்பதோடு அன்புமணி தலைவராக உள்ளார் என்றும் தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருவேளை அன்புமணி தலைவர் பதவியில் இல்லை என்பதற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால் எதிர்மனுதாரர்கள் உரிய முறையில் அணுகலாம் என்றும் தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களின் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்றும், கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தார். மேலும், அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரரின் கருத்தைப் பெற்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது என்றும் நீதிபதி உத்தரவிட்டனர். கட்சியின் உரிமைக்குரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


