நயினார் நாகேந்திரன் விஜயை கூட்டணிக்கு வருமாறு வெளிப்படையாகவே அழைக்கிறார். பாஜகவை சித்தாந்த எதிரி என்று சொல்லிவிட்டு, அமித்ஷா கூப்பிட்ட உடன் விஜய் சென்றால், அவரும் மற்ற கட்சிகளை போன்று சராசரி கட்சிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்தும், விஜய் கட்சியை பாஜக கூட்டணிக்கு அழைப்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திமுக கூட்டணிக்கு புதிதாக தேமுதிக, பாமக வரும் என்று அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இதில் தேமுதிக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் பாமக வர வாய்ப்பு குறைவு. அந்த எண்ணம் இரண்டு மருத்துவர்களுக்கும் கிடையாது. அன்புமணி, பாஜகவின் மிட்டல் காரணமாகவோ, அல்லது மரியாதை காரணமாகவோ அந்த பக்கம் உள்ளார். காலை பிடித்துதான் பாஜக கூட்டணிக்கு சென்றதாக அவர் அப்பா சொல்கிறார். ராமதாசும் அண்மையில் அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என்று சொல்கிறார். அதற்கு காரணம் நடைமுறையில் திமுக கூட்டணியில் இடம் கிடையாது. 30க்கும் மேற்பட்ட இடங்களை வாங்கி நின்றவர்கள் அவர்கள். குறைந்த இடங்களுக்கு ஒப்புக்கொண்டு அவர் வர மாட்டார். இடநெருக்கடி காரணமாக அதற்கு வாய்ப்புகள் குறைவு. அதேவேளையில் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே போகிறது என்று சிலர் சொல்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பழைய வாக்கு வங்கி மதிமுகவுக்கு கிடையாது. ஏனென்றால் புதிய கட்சிகள் அந்த வாக்குகளை பிடுங்குகின்றன.
ராமதாஸ் இன்றைக்கு முதலமைச்சர் குறித்தும், கலைஞர், திருமாவளவன் போன்றவர்கள் குறித்தும் பேசுவதை அரசியல் ரீதியாக பொருத்தி பார்க்கக்கூடாது. ஒரு வேலை ராமதாஸ் திமுக கூட்டணிக்கே செல்வதாக வைத்துக்கொள்வோம். குறைந்தபட்சம் 25 இடங்கள் கேட்பார்கள். அவ்வளவு இடம் திமுகவிடம் உள்ளதா? கூட்டணி கட்சிகளிடம் எடுக்கலாம் என்று சொன்னால் திமுக எவ்வளவு விட்டுக்கொடுப்பார்கள். மதிமுக ஏற்கனவே 12 இடங்கள் கேட்கிறது. மதவாதத்தை எதிர்ப்போம் என்று சொல்லிவிட்டு கூட்டணி கட்சிகளிடம் இருந்து இடங்களை பிடுங்கினால் சரியாகுமா? கூட்டணியில் இருந்து ஒருவர் கூட போய்விடக்கூடாது என்று முதமைச்சர் நினைக்கிறார். வேல்முருகன், ஈஸ்வரன் போன்றவர்கள் கூட போய்விடக்கூடாது என்று முதலமைச்சர் நினைக்கிறார். அப்படி இருக்கிறபோது முதலில் தொகுதிகளை குறைக்காமல் கொடுக்க வேண்டும். அப்படி இருக்கிறபோது ராமதாசுக்கு குறைந்தபட்சம் 25 தொகுதிகள் வழங்க வேண்டும். காங்கிரசை வெளியேற்றினால்தான் அவர்களுக்கு 25 தொகுதிகளை தர முடியும். அதை திமுக செய்யுமா?
மருத்துவர் ராமதாசை செல்வப்பெருந்தகை சந்தித்தது மரியாதை நிமித்தமாக கூட இருக்கலாம். வேல்முருகன் கூட தனது அண்ணன் திருமால்வளவனை அனுப்பி ராமதாசிடம் பேசினார். குருமூர்த்தி போனார். கட்சியை பிளந்துவிடுவார்கள் என்று பேசினோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதனால் ஒவ்வொன்றையும் அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. என்னை பொருத்தவரை பாமக இன்னும் உடையவில்லை. ராமதாஸ் பாமகவில் இருந்து நீக்குகிறவர்களுக்கு, அன்புமணி உடனடியாக பொறுப்பு வழங்குகிறார். அப்படி நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகளில் பாமக என்றுதான் இருக்கிறது. பாமக அன்புமணி என்றோ, பாமக ராமதாஸ் என்று பிரிவு இல்லை. அதிகாரப்பூர்வமாக அந்த கட்சி பிளவுபடவில்லை. தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று தான் அன்புமணி சொல்கிறாரே தவிர நான்தான் பாமக என்று அவர் சொல்லவில்லை. இந்த சண்டை தொடர்ந்தால் உடையாமலே உடைந்ததாக தான் அர்த்தம். ஆனால் பாமக பிளவுபட்டதாக உடைந்துவிட்டதாக சொல்ல வேண்டும். ராமதாஸ் வெற்றி பெறும் கூட்டணியில்தான் பயணிப்பார். அன்புமணி எதார்த்த அரசியல், கொஞ்சம் பிரயோஜனமான அரசியல் என்று தான் பார்ப்பார். அதனால் இருவரும் தனித்து நிற்கிற விஷப்பரீட்சையை இன்னொரு முறை செய்ய மாட்டார்கள். பாஜக – அதிமுக கூட்டணிக்கு தான் வருவார்கள்.
பாஜகவின் அணுகுமுறை குறித்து ராமதாசுக்கு எந்த வித முரண்பாடும் கிடையாது. காரணம் அமித்ஷாவின் பேச்சை சரியானது என்று ராமதாஸ் குறிப்பிடுகிறார். பாஜகவின் கபளீகர அரசியல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே நாடு முழுவதும் தெரியவந்துவிட்டது. இதெல்லாம் தெரிந்தும் தான் 2024ல் பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். பாஜக ஆபத்தான கட்சி, அதனால் அதனுடன் கூட்டணி வைக்க மாட்டோர் என்று நினைக்கிறோம். இன்றைக்கு அவர் செய்வார் என்றால் அன்றைக்கே அதை செய்து இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை. பாமக ஒரு சமூகநீதி கட்சியாகும். அதை எல்லாம் தெரிந்துதான் அவர்கள் பாஜக கூட்டணிக்கு சென்றார்கள். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். இன்றைய நிலைமையில் அதிமுக – பாஜக கட்சிகள் தான் கூட்டணியில் பிரதானமாக இருக்கின்றன. பாமக இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை. வர வாய்ப்பு உள்ளது என்றுதான் சொல்கிறேன்.
அமித்ஷா வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுக்கிறார். நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கிறார். அது நடக்குமா? விஜய் போராவா? என்று கேள்வி இருக்கிறது. ஃபேஸ் வேல்யூக்காக அதிமுக கூட்டணிக்கு போனாலும் போவார். ஆனால் பாஜக கூப்பிட்டு அவர் போவாரா? விஜய் சுற்றுப்பயணம் போக போகிறார். அவர் 10 ஊர் போவதற்குள் 10 இடங்களில் கல் எரிந்துவிடுவார்கள். அவருடைய ரசிகர்களே ரசிக்க மாட்டார்கள். பேச்சு ஒன்று, செயல் ஒன்றாக இருக்கிறது என்று விமர்சிப்பார்கள். அதற்கு முதலில் கொள்கை எதிரி, சித்தாந்த எதிரி போன்ற வார்த்தைகளை எல்லாம் குறைத்துக்கொண்டு அதன் பிறகு கூட்டணிக்கு போக வேண்டும். ஒரு பக்கம் கொள்கை எதிரி என்பார். மற்றொருபுறம் அமித்ஷா கூப்பிட்டால் ஓடோடி போனால் விஜயும் பத்தோடு, பதினொன்று என்றுதான் விஜய்க்கு மரியாதை இருக்கும். விஜயிடம் வாக்கு வங்கி உள்ளதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அதனால்தான் விஜயை கூட்டணிக்கு அழைக்கிறார்கள். பாஜக அல்லாத அதிமுக உடன் விஜய் கூட்டணி வைப்பார். அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது.
திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு அதிமுகவை விமர்சிக்க மாட்டார்கள். சட்டமன்றத் தேர்தல் நடக்கிறபோது பாஜக என்கிற வார்த்தையே வரக்கூடாது. ஆனால் விஜய் மற்றும் அவருடைய ஆட்கள் தொடர்ந்து செய்கிறார்கள். அப்போது நீங்கள் நடிக்கிறீர்கள் என்று அர்த்தம். உள்ளே ஏதோ மறைமுக அஜெண்டா இருக்கிறது என்று அர்த்தம். நடக்கப் போவது சட்டமன்றத் தேர்தல். திமுக, அதிமுக, சீமான், விஜய் என்று சொல்லுங்கள். எதற்கு சம்பந்தமே இல்லாமல் பாஜக குறித்து பேசுகிறீர்கள். இருப்பது அதிமுக கூட்டணி. அதில் பாஜக இடம்பெற்றுள்ளது. இந்த புரிதல் இல்லாவிட்டால் யாரோ, எதையோ மறைத்து நாடகமாட தயாராகிறார்கள் என்றுதான் அர்த்தம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.