spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதி.மு.கவிற்குப் போட்டி எதிர்க்கட்சி இல்லை, உதயநிதியின் இளைஞரணிதான்! வே. மதிமாறன் புகழாரம்! 

தி.மு.கவிற்குப் போட்டி எதிர்க்கட்சி இல்லை, உதயநிதியின் இளைஞரணிதான்! வே. மதிமாறன் புகழாரம்! 

-

- Advertisement -

விருதுநகரில் நடைபெறும் திமுக தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், 2026 வெற்றியின் முன் அறிவிப்பின் நிகழ்வாக அமைய வாழ்த்துவதாக எழுத்தாளர் வே.மதிமாறன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விருதுநகரில் நடைபெறும் திமுக தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான வே.மதிமாறன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் தலைவராகப் பதவியேற்றார் தளபதி ஸ்டாலின். 2019 நாடாளுமன்ற வெற்றி. 2021 சட்டமன்ற வெற்றி. உள்ளாட்சி வெற்றி. இடைத் தேர்தல்கள் வெற்றி. 2024 மீண்டும் நாடாளுமன்ற வெற்றி. தொடர் வெற்றி. நான்கரை ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. தி.மு.கவும் கூடுதலாக வளர்ந்திருக்கிறது. நான்கரை ஆண்டு ஆட்சியின் நலத் திட்டங்களுக்குப் பிறகு இன்றைய நிலவரப்படி எதிர்க்கட்சிகளின் நிலை மிகக் கவலைக்கிடம். 2021-ல் இருந்ததைவிட இப்போது அ.தி.மு.க உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் கட்சிக்குள்ளே உடைந்து சிதறியிருக்கிறது. வெளியே நிலைத்தடுமாறி பெரும்பள்ளத்தில் சரிந்திருகிறது. அப்போ, திராவிட முன்னேற்றக் கழத்திற்குப் போட்டியே இல்லையா? இருக்கிறது. அது உதயநிதி தலைமையிலான தி.மு.கவின் இளைஞரணிதான். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என உதயநிதியிடம் பொறுப்புகள் வந்து சேர்ந்ததற்குப் பின்புலம் எது? அது தி.மு.க-வின் தலைமை அமைப்புக்கு இணையாகத் தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்டமாக உயர்ந்திருக்கிற இளைஞரணி.

எளிய உழைக்கும் மக்கள்கூடி அரசியல் பேசும் தேநீர் கடை, முடிதிருத்தகத்தில் வளர்ந்தது தி.மு.க. அதற்குச் சாட்சியாகக் கோபாலபுரம் முடித்திருத்த கடையில ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ எனத் தளபதி ஸ்டாலின் அவர்களால் விதைக்கப்பட்டது இளைஞரணிக்கான விதை. 1980ல் ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் கலைஞரின் வாழ்த்துகளோடு தளபதி ஸ்டாலின் அவர்களால் தி.மு.க-வின் இளைஞரணியாக மாற்றம் பெற்றது.  2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குத் தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறகு பெரும் பங்கு உதயநிதியின் பிரச்சாரம் வகித்தது. அதன் காரணமாக வெற்றிபெற்ற வேட்பாளர்களும் தொண்டர்களும் உதயநிதி அவர்களுக்குக் கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் 04.07.2019 அன்று அவர் இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்றார். இஸ்லாமிய மக்களுக்கு எதிராகப் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை் எதிர்த்துத் தி.மு.கச் சார்பாக உதயநிதி தலைமையிலான இளைஞரணிதான் முதல் போராட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையில் நடத்தியது.

2021 சட்டமன்றத் தேர்தலில் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு அடுத்து உதயநிதியின் தீவிரப் பிரச்சாரம் 10 ஆண்டுகளுப் பிறகு திமுகவை ஆட்சியில் வர காரணமாக அமைந்தது. தன் தொகுதி சேப்பாக்கத்தில் ஒருநாள் மட்டுமே பிரச்சாரம் செய்த அவர் தமிழகம் முழுவதும் மற்றவரின் வெற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயணம் செய்தது அவரின் தலைமை பண்பை அடையாளப்படுத்தியது.தமிழகப் பாஜக கட்டிடத்தின் ஒரு செங்கல்லை உருவி அதைச் சரிய வைத்தார். வெற்றிக்குப் பிறகு போதும் என நிற்காமல் அதற்குப் பிறகுதான் அவர் கட்சி பணி தீவிரமடைந்தது. தேர்தல் வெற்றியைத் தாண்டி கொள்கைத் தெளிவே முக்கியம் என அவர், இளைஞர்களுக்கு 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தியது திமுக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய தேர்தல் அரசியல் கட்சிகளின் வரலாற்றிலேயே புதியது.

திமுக - அண்ணா அறிவாலயம்

அந்தத் தத்துவ அரசியல் பயிற்சியின் நீட்சியாகச் சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், பிறகு முரசொலியில் பாசறை பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம், 75 ஆண்டுக்காலத் தி.மு.க வரலாறை சொல்லும் ‘காலத்தின் நிறம் கருப்புச் சிவப்பு’ புத்தகம், இந்தியாவிலேயே முதல் முறையாக முற்போக்குப் புத்தகக்காட்சி. அதை ஒட்டி நடந்த அறிவுத்திருவிழா, திசையெங்கும் திராவிடம் பின்புலத்தில் 200க்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து மேடை ஏற்றியது என அறிவுத் துறையில் உதயநிதி காட்டிய பாய்ச்சல். அதற்கு இணையாகப் போராட்டக் களத்தில், நீட் தேர்வை ஒழிக்க வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம், தொகுதி மறுசீரமைப்பு – இந்தி திணிப்பு எதிர்ப்பு – நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சத்தைக் கண்டித்துத் தெருமுனைக்கூட்டங்கள் என உதயநிதி தலைமையிலான இளைஞர் அணி தி.மு.க விற்கு ஆரோக்கியமான போட்டியாக அடித்து ஆடுகிறது.

5 லட்சம் நிர்வாகிகள் 50 லட்சம் உறுப்பினர்கள் – இது தி.மு.கவிற்கு எதிராக இருக்கும் பெரிய கட்சியின் பின்புலம் அல்ல, தி.மு.கவிற்குத் தோள் கொடுக்கும் உதயநிதியின் இளைஞரணி சாதனை. 234 தொகுதிளுக்கும் வேட்பாளர்கள் இல்லாமல் அல்லாடும் தி.மு.கவிற்கு எதிரான பழைய, புதிய கட்சிகளின் நிலையில், இது இந்தியளவில் எந்தக் கட்சிக்கும் இல்லாத இளைஞரணியின் சிறப்பு. 5 லட்சம் நிர்வாகிகளையும் உதயநிதியே நேர்காணல் செய்து தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதே உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கடும் உழைப்பிற்குச் சாட்சி. மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பு என்ற அடிப்படையில் முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பே மாநாடுபோல் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. 1.30 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மரத்தின் மீது ஏறுபவர்கள், கம்பத்தில் எண்ணெய் தடவும் நிர்வாகிகள். நாற்காலிகாலிகளைத் தூக்கிச் செல்லும் ரசிகர்கள், பொதுமக்களைத் துன்புறுத்தும் மாநாடு நடத்துபவர்கள் மத்தியில் அப்படி ஒரு கட்டுக் கோப்பாக நடந்து முடிந்தது. அதன் அடுத்த நிகழ்வாகத் தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு 07.02.2026 அன்று மாலை 3 மணியளவில், விருதுநகர் – கல்குறிச்சியில் முதலமைச்சர் சிறப்புரையோடு நடக்க இருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி தலைமையிலான இளைஞரணியை எதிர்கொள்வதை நினைத்தால் எதிர்க்கட்சிகளுக்குக் கலக்கம் ஏற்படுத்தும் இரண்டாவது சந்திப்பு இது. திராவிட முன்னேற்றக் கழத்தின் இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இளைஞரணி துணை செயலாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இனிய வாழத்துகள். திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சிகளிலிருந்து உதயநிதி அவர்கள் வடிவமைக்கிற எல்லா நிகழ்ச்சிகளிலும் அவருடன் நான் தொடர்ந்து பயணிக்கிறேன். திராவிட மாடல் பயிற்சி நிகழ்ச்சி பேச்சாளர்களில் என் பெயரை முதலில் எழுதி அறிவித்தார் என்பது எப்போதும் மகிழ்ச்சியோடு மனதில் இருக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியின் தலைமையிலான தி.மு.க இளைஞரணியின் ஆட்டம் அதிரடியாக இருக்கும். அந்த ஆட்டக்களத்தில் சந்திப்போம். 1967ல் தி.மு.க-வின் வெற்றியை உரத்து உலகிற்குச் சொன்ன விருதுநகரில் 2026 வெற்றியின் முன் அறிவிப்பின் நிகழ்வாக உங்கள் சந்திப்பை நிகழ்த்துங்கள். 234 தொகுதிகளிலும் நம் முகமே. மகிழ்ச்சி, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ