கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும் சிபிஐ, விஜயிடம் விசாரணை நடத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கூறியுள்ளார்.


கரூர் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகளின் தொடர் விசாரணை நடத்துவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி உள்ளனர். கரூர் கூட்டநெரிசல் விவகாரம் விஜய்க்கு மிகவும் நெருக்கடியானன ஒன்று ஆகும். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் விஜயின் பெயரை சேர்க்கப் போகிறார்களா? என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.
ஐதராபாத் திரையரங்க கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் விஜயின் பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்படாவிட்டால் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தும். காரணம் தவெக நிர்வாகிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாலும், விஜயை பார்க்க வந்துதான் உயிரிழப்புகள் ஏற்பட்டது. எனவே அவருக்கு அதற்கான தார்மீக கடமை உள்ளது. ஒரு சாட்சியாக கூட அவரை அழைத்து விசாரிக்கலாம்.

வழக்கில் தன்னை தனியாக விசாரணைக்கு அழைக்கும் சூழல் ஏற்படுமா? என விஜய் நிர்வாகிகளிடம் அடிக்கடி போன் செய்து கேட்பதாக சொல்லப்படும் நிலையில், அது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் படத்தின் விழாவுக்கு பிறகு தவெக மிகவும் அமைதியாக இருக்கிறது. அதை வைத்து பார்க்கிறபோது விஜய்க்கு அவருக்கு தன்னை விசாரணைக்கு அழைக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரக்கூடும் என்பதுதான் என்னுடைய புரிதலாகும். சிபிஐ விசாரணையின் போது, விஜயின் வாகன ஓட்டுநர் நிறைய இடங்களில் தடுமாறியதாகவும், முதலில் சொன்ன தகவலை பின்னர் மறுத்ததாகவும் வெளியாகியுள்ளது.
அப்போது ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு அதற்கு விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் பிரச்சார வாகன ஓட்டுநருடன் விஜய் நடத்திய உரையாடல்கள் மிகவும் முக்கியமானது. விஜய் கூட்டத்திற்கு தாமதமாக போக சொல்லி இருந்து, அந்த தகவல் வெளியே வந்தால் அது அவருக்கு பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தும். அவர் கரூருக்கு ஏன் போகவில்லை என்றும் கேள்வி எழுப்ப வாய்ப்புகள் உள்ளன.

சி.டி.நிர்மல் குமார், சிபிஐ விசாரணையை சில ஊடகங்கள் அரசியல் ரீதியாக பார்ப்பாக தெரிவித்துள்ளார். அப்படி எந்த ஊடகமும் பார்க்கவில்லை. சிபிஐ பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்பது நீண்ட காலமாக உள்ள குற்றச்சாட்டு ஆகும். அவர்களாகவே சென்று மாட்டிக்கொண்டு, அதற்கு மற்றவர்களை குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. சிபிஐ விசாரணை தவெகவுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு கிடையாது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்க இருக்கும் இறுதித் தீர்ப்பு கண்டிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சவுக்கடி இருக்கும்.
மக்களை வாக்கு இயந்திரங்களாக பார்க்காமல், அவர்களை கண்ணியத்தோடு நடத்த வேண்டும் என்று தான் இறுதித்தீர்ப்பு வரும் என்று நான் பார்க்கிறேன். சட்டமன்ற தேர்தல் நேரத்தின்போது, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அது விஜய்க்கு மிகப்பெரிய சறுக்கலாகும். காவல்துறையினர் அனுமதி வழங்காததால் தான் கரூருக்கு தான் போகவில்லை என்று சொல்கிறார். அதே காவல்துறையினர் அரசியலை விட்டு போகச் சொன்னால், விஜய் அரசியலை விட்டே போய் விடுவாரா?

கரூர் சம்பவத்தில் 36 பேர் இறந்துவிட்டதாக பத்திரிகையாளர்கள் கேட்டபோது பதில் அளிக்காமல் விஜய் வேகமாக சென்றார். கிட்டத்தட்ட 3 நாட்கள் கழித்து தான் இந்த விவகாரத்தில் பதில் அளித்தார். நாளைக்கு விஜய் ஆட்சிக்கு வந்தால், இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு எதிர்வினையாற்ற இத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வாரா? விஜய் சொல்கிற படி கரூர் சம்பவம் திமுகவின் சதியாக இருந்தால், அந்த நொடியில் ஒரு தலைவராக பாதிக்கப் பட்டவர்களை சென்று பார்த்திருக்க வேண்டும். அவர் சென்றால் கூட்டநெரிசல் ஏற்படும் என்றால், அவர் நிர்வாகிகளை அனுப்பி வைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியிருக்கலாம். ஆனால் விஜய் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
விஜயை தவிர்த்து வேறு யார் செய்திருந்தாலும், அவர் மீது சிபிஐ, தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கும். ஆனால் விஜய் இன்றைக்கு மலேசியாவில் போய் நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. ஜனநாயகன் வெளியாக உள்ளது. அவர் குற்றவாளியா? என்று நீதிமன்றம் முடிவு செய்யட்டும். விஜய் சுதந்திரமாக சுற்றி வருவதை அனைத்து அரசியல் கட்சிகளும் வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறார்கள். அப்போது சட்டம் சாமானியருக்கு ஒரு மாதிரியும், பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியாகவும் உள்ளது. விஜய் வழக்கில் எனக்கு இந்த சந்தேகம் எழுகிறது.


