எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற முயற்சித்து தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி பாஜக உடன் கூட்டணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் நடிகர் விஜய் தனித்து களமிறங்குவதன் பின்னணி குறித்து பழ.கருப்பையா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தவெக தலைவர் விஜய் ஒன்று சிந்திக்க வேண்டும். அதிகாரத்தில் பங்கு தருவேன் என்று இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அறிவித்தது கிடையாது. இவர் எடப்பாடியுடன் கூட்டணி சேர முயன்றபோது கூட அதிகாரத்தில் பங்கு இல்லை. நாங்கள் எப்போதும் போல 180 இடங்கள் வரை நிற்போம். தனித்துதான் ஆட்சி அமைப்போம். உங்களுக்கு உரிய இடங்களை நாங்கள் தருகிறோம் என்றுதான் எடப்பாடி தரப்பில் சொன்னார்கள். அதிமுக – தவெக பேச்சுவார்த்தையில் விஜய் அதிக இடங்களை கேட்டதால்தான் கூட்டணி முறிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரத்தில் பகிர்வு என்பது எங்கள் கட்சியில் வழக்கமில்லை. உங்களுக்கு 40 இடங்கள் வரை தருகிறோம். அப்போது நீங்கள் விஜயகாந்தை போன்று 30 இடங்களை போல பெறலாம். மற்ற கட்சிகளையும் சேர்த்துக்கொள்கிறபோது பிறருடைய வலிமை நம்முடன் பகிரப்படும் என்றும் சொல்லியுள்ளார். ஆனால் விஜய் தரப்பில் சரிசமமான இடங்களை கேட்டதாகவும், அதிகாரத்தில் பங்கு கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதால் தான் விஜய் தனித்து பார்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, தனது கூட்டணியை ஒரு சமய சார்பற்ற கூட்டணியாக அமைக்கவே விரும்பியுள்ளார். ஆனால் விஜய் அதற்கு ஒத்துவரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலை இருந்தது என்றால் அதிமுக ஒன்று பாஜக உடன் கூட்டணி அமைக்கும், அல்லது விஜயுடன் கூட்டணி அமைக்கும் என்றுதான் இருந்தது. தற்போது பாஜக உள்ளே வந்துவிட்டதால், விஜய் தனித்து விடப்பட்டுள்ளார். திமுகவை வீழ்த்துவது மிகவும் அவசியம் என்கிறபோது, பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டியது கட்டாயமாகிறது. எடப்பாடியை பொருத்தவரை இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு கட்சியோடு சேர்வதால் நன்மை இருக்க வேண்டும். ஆனால் பாஜக உடன் சேர்ந்தால் தீமைதான் அதிகம். அவர்களுக்கு 6 – 7 சதவீத வாக்குகள் உள்ளது. ஆனால் 12 சதவீதம் எதிர் வாக்குகள் உள்ளன. சீமானுக்கு 8 சதவீத வாக்குகள் உள்ளன. ஆனால் நாயுடு, கம்மாளர், ரெட்டியார், கன்னடியர் என பல்வேறு சாதிகளை சேர்ந்த ஒரு கோடி பேர் அவருக்கு எதிராக உள்ளனர். ஏனென்றால் அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை என்று சீமான் சொல்லி வைத்திருக்கிறார். அவர்கள் பல ஆண்டுகளாக தமிழில்தான் பேசுகிறார்கள். தமிழில்தான் சிந்திக்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு ஒன்று என்றால் அவர்கள் தான் முன்னால் வந்து நிற்கிறார்கள். அவர்களை போய் சீமான் வேற்று மொழி என்று பேசி பேசி எதிரி ஆக்கிவிடுகிறார்.

அதிமுக தற்போது பாஜக, சீமானை தான் நெருங்கி வருவதாக சொல்கிறார்கள். ஆனால் சீமானை அவர்கள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அவரை சேர்த்தால் எதிர்ப்பு வாக்குகள் அதிகம். அதேவேளையில் பாஜகவை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இஸ்லாமியர்கள் ஒரு பக்கம் வர மாட்டேன் என்கிறார்கள். ஒரு தேர்தலில் வெளியே வந்து பார்த்தார். ஆனால் முஸ்லிம்கள் ஒத்துவரவில்லை. அவர்கள் ஸ்டாலின் பக்கம்தான் உள்ளனர். அதனால் பாஜக உடன் பாமக, கிருஷ்ணசாமி போன்றோர் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக போராடி கொண்டிருக்கிறார். சிறுபான்மையினரின் வாக்குகள் வரவில்லை. சரி பாஜகவிடம் உள்ள வாக்குகளாவது வரட்டுமே என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் விஜய் என்று 3 முனை போட்டிதான் உள்ளது. சீமான் மீதான பிம்பம் என்பது பெரிய அளவில் சரிந்துவிட்டது. விஜய் வருகை அவருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.திமுகவுக்கு மாற்று தவெக தான் என்று விஜய் சொல்கிறார். என்னுடைய அனுபவத்தில் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். பரந்தூருக்கு போனார் அல்லவா? அந்த போராட்டத்தை வெற்றி பெற வைத்துக்கொடுத்தாரா?
மோடி எதிர்ப்பு என்பது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு நிச்சயமாக கை கொடுக்கும். சிறுபான்மையினரின் 12 சதவீத வாக்குகள் என்பது கிட்டத்தட்ட 6 கட்சிகளினுடைய வாக்குகள் அளவுக்கு சமமானது. திருமாவிடம் 3 சதவீதம், சிபிஐ, சிபிஎம் தலா 1 சதவீதம், காங்கிரசுக்கு 5 சதவீதம் வாக்குகள் உள்ளன. இவர்கள் அனைவரையும் சேர்த்தால் எவ்வளவு வாக்குகள் வருகிறதோ, அவ்வளவு வாக்குகள் சிறுபான்மை மக்களிடம் இருந்து வருகிறது. அது ஒரு பெரிய கூட்டணியாக அமைந்து விடுகிறது. அந்த கூட்டணியை பெறுவதற்காக தான் எடப்பாடி வெளியே போனார். அவர்கள் ஒத்துவரவில்லை. விஜயை வைத்தாவது மதச்சார்பற்ற முன்னணியை உருவாக்கலாம் என்று எண்ணினார். ஆனால் விஜயும் ஒத்துவரவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.