நடிகர் விஜய் திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில், அவர் திருச்சியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

விஜய் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது:- தவெக தலைவர் விஜய் சுற்று பயணம் செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து தொடங்க உள்ளது. தவெகவின் செயல்பாடுகள் தான் திமுகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தங்களை பார்த்து தான் திமுக பயப்படுவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். அது ஓரளவுக்கு நியாயமானது. திமுக பயந்தால் அதில் ஆச்சரியமில்லை. பயப்படும் என்று தான் நான் சொல்வேன். மற்றபடி மாநாட்டிற்கு இடம் வழங்கும் விவகாரத்தில், எல்லோரும் நடத்தும் இடத்தில் இவர்களும் கேட்டு இடம் இல்லை என்று சொன்னால், நீதிமன்றத்திற்கு செல்கிறபோது அனுமதி கிடைத்துவிடும். இவை எல்லாம் சில நாள் கூத்தாகும். ஏன் திருச்சியில் விஜய் பிரச்சாரத்தை தொடங்குகிறார் என்றால், திருச்சியில் தான் விஜய் போட்டியிட போகிறார் என்கிற ஒரு தகவல் இருக்கிறது. தற்போது இனிகோ இருதயராஜ் இருக்கிற தொகுதி என்று சொல்கிறார்கள்.
திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதி. மதுரைக்கு அடுத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களில் திருச்சியும் ஒன்று. சுற்று பயணம் போகிற ஊர்களில் மக்களின் பிரச்சினைகளை, அன்றாட அரசியலை, அந்த அந்த நேரத்து பிரச்சினைகளில் அவர் கருத்தை சொன்னார் என்றால் அது கவனிக்கத்தக்க பயணமாக மாறும். மற்றபடி கூட்டம் கூடியது. போலீஸ் தடைகளை தாண்டி மாநாடு நடத்தினோம் என்பதெல்லாம் கதைதான். விஜய் என்ன பேச போகிறார்?. எதை பேசுவதை தவிர்த்தார்? என்பதை தான் மக்கள் கவனிப்பார்கள். விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளதாக விஜய் கூறியுள்ளார்.
இதெல்லாம் விவாதத்திற்கு உரிய விஷயங்களா? ஒரு இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்றால், மற்றொரு இடத்தில் தரப் போகிறார்கள். மாறாக அவர் திருச்சிக்குள்ளே வரக்கூடாது என்று சொன்னால், திமுகவிடம் கூட பேசக்கூடாது. நேரடியாக நீதிமன்றத்திற்கு வரப் போகிறார். அங்கே சொல்லப் போகிறார். கட்சியினர் போய் விஜயிடம் சொல்லியதன், அடிப்படையில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய் பிரச்சார பயணத்தை தொடங்கி, அந்த பயணத்தில் என்ன பேசினார் என்பதுதான் முக்கியமே தவிர, இவை எல்லாம் கடந்துசெல்ல போகிற விஷயங்கள் என்று திரும்பவும் சொல்கிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் மையப் பொருளாக இருப்பார். அவர் என்ன ஆவார்? என்ன கதி ஆவார்? போன்றவற்றை எல்லாம் தாண்டி வந்துவிட்டார். எவ்வளவு வாக்குகளை வாங்குவார் என்கிற இடத்திற்கு தாமாவே வந்துவிட்டார். இரட்டை இலக்கத்திலான வாக்குகளை சுலபமாக பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். குறைந்தபட்சம் 10 சதவீதம். காட்சிகள் போகிறதை பார்த்தால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை பார்த்தால் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகமாக சேதாரமடையும். விஜய் குறித்து டிடிவி தினகரன் சொன்ன கருத்துக்கள் சரியானது. விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். சேதாரம் எல்லோருக்கும் இருக்கும் என்று சொன்னார். அது உண்மை. இதை சொன்ன தினகரன் கட்சியில் இருந்து 10 பேர் போவார்கள். அதை தடுக்க முடியுமா உங்களால்? பிரபலத்திற்கு இருக்கிற பலமே அதுதான்.
ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன் போன்றவர்கள் ஒரு அணியாக இணைந்து, விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்று சொல்கிறார்கள். அது இயல்பாக அணியாக அமையும். அவர்களுக்கு வேறு வழியில்லை. எடப்பாடி பழனிசாமி ஒதுக்கிவிட்டார் என்பதற்காக அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். அவர்களும் களமாடவே செய்வார்கள். ஒன்று தனித்து நிற்கலாம். ஒத்துவரும் பட்சத்தில் விஜயுடன் கூட்டணிக்கு செல்லலாம். இவர்கள் விஜயை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. அந்த மரியாதை குறையாத வரை அவர்கள் அந்த அணி அமைப்பதில் ஆச்சரியமில்லை.
அல்லது இவர்கள் எல்லாம் சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பாடம் கற்பிப்போம். அதிமுக தொண்டர்களுக்கு அறைகூவல் விடுப்பதற்காக நாம் இந்த தேர்தல் களத்தை பயன்படுத்திக்கொள்வோம் என்று 70-80 தொகுதிகளில் தனியாககூட நிற்கலாம் அல்லவா? வாய்ப்புகள் இரண்டு தான் உள்ளன. தேர்தல் கூட்டணி என்று வருகிறபோது விஜய், முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார். இந்த கூட்டணிக்கு தேமுதிக, பாமக வருமா என்பது உறுதியாக கூற முடியாது. தேமுதிக இரண்டு பக்கமும் கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளனர். பாமக அனேகமாக என்.டி.ஏ கூட்டணியில் தான் இணையும். அன்புமணி இந்த பக்கம் வர வாய்ப்புகள் குறைவு.
அன்புமணியும், ராமதாசும் மீண்டும் இணைந்தாலும் பாமகவுக்கு அந்த பழைய பலம் இருக்காது. கட்சியை அந்த கதிக்கு ஆளாக்கியதற்கு அவர்கள் இருவரும்தான் பொறுப்பு. வன்னியர்களே யோசிக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு வகையில் வன்னியர்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பெருமை தந்தை – மகனைதான் சாரும். இருவரும் வேண்டாம் வேண்டாம் என்று அடுத்துக்கொண்டு, தங்களை தாங்களை அவமதிப்பு செய்துகொண்டனர். வன்னியர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் என்று நான் ஒரு வகையில் சந்தோஷப்படுவேன். மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உங்களை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்க? என்று அடுத்த சமுதாயமோ, அடுத்த கட்சியோ சொல்ல வேண்டிய அவசியமில்லை. பாமகவினரே அதை உணர தொடங்கி விட்டார்கள்.
பாமகவிடம் உள்ள 4 சதவீத வாக்கு வங்கி தற்போது என்ன கதி ஆனது என்று பார்க்க வேண்டும். அதற்கு ராமதாசும், அன்புமணியும்தான் காரணம். இருவரும் ஒன்றிணைந்து என்டிஏவில் வந்து சேர்ந்தாலும் அந்த 4 சதவீத வாக்குகள் அப்படியே கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அதற்கு காரணம் விஜயால் ஏற்படுத்துகிற ஒரு தாக்கம். தந்தை – மகன் இருவரும் மாறி மாறி சேற்றை வாரி பூசிக் கொண்டதில் ஒரு தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அந்த பாடத்தை இருவரும் கற்றுக்கொள்ளட்டும்.
சுற்றுபயணம் செல்வது என்பது ஒரு அரசியல் கட்சியின் கடமையாகும். காசு இருக்கிறது. ஜிலுஜிலு என்று பஸ்-ஐ ரெடி செய்து கொடுக்கிறார்கள். விஜய், இன்னும் சற்று ஹைடெக் ஆக வருவார். சீமான், நான் மாட்டு வண்டியில் கூட செல்வேன் என்று அவர் ஒரு ஸ்டைலில் கிளம்புவார். ஒவ்வொருவரும் களமாட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அலைச்சல் எல்லாம் என்னால் முடியாது என்று தான் ரஜினி தெறித்து ஓடினார். சும்மா வீட்டில் இருந்துகொண்டே வீடியோவில் பேசி வாக்குகளை பெற இது 1996 கால கட்டம் கிடையாது. ஓட்டு போடுங்க என்று சொல்வதற்கு வேண்டுமெனில் வீடியோ பயன்படும். ஆனால், களமாடுவதற்கு நீங்கள் மக்களிடம் போய் சேர வேண்டும்.
பிரேமலதா, அன்புமணி போன்றவர்களும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது எல்லோருடைய கடமை. இனி இது தீவிரமாகும். ஆனால் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். சீமான், மரங்களின் மாநாடு, நதிகளின் மாநாடு என்று நடத்துகிறார். எல்லா விஷயங்களிலும் தனக்கு அக்கறை இருப்பதாக சொல்கிறார். அதை மக்கள் எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் என்று பார்ப்போம். அந்த சீமான் தான் வாங்கிய 8.5 சதவீத வாக்குகளை தக்க வைக்கிறாரா? அல்லது விஜயிடம் சற்று பறிகொடுக்கிறாரா? அல்லது விஜய் வந்தபோதும் தன்னுடய வாக்கு வங்கியை உயர்த்தி இருக்கிறாரா? என்று பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.