spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅஜீத்தை கொன்னது நாங்கதான்! போலீஸ் மனைவி வாக்குமூலம்! விளாசும் ஜீவசகாப்தன்!

அஜீத்தை கொன்னது நாங்கதான்! போலீஸ் மனைவி வாக்குமூலம்! விளாசும் ஜீவசகாப்தன்!

-

- Advertisement -

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட காவல்துறையினரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியுள்ளது, மனிதாபிமானம் அற்ற செயல் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

இளைஞர் அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறையினரின் மனைவிகள் போராட்டம் நடத்தியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்கிற ஏழை தொழிலாளியின் கஸ்டடியல் டெத் என்பது தமிழர்களை உலுக்கியுள்ளது. ஏழை மீது புகார் தெரிவித்தால் காவல்துறை எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாமா? என மக்கள் பதறுகிறார்கள். கிராமப்புற காவல்நிலையங்களில் உள்ளூரில் செல்வாக்கு மிக்க நபர்கள் அளிக்கும் புகார்களின் மீது போலீசார், ஏழை மக்களுக்கு எதிராக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இன்று வரை இந்த மோசமான நிலை இருக்கிறது. இதற்கு உதாரணமாக தான் அஜித்குமார் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் உள்ளது.

பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேஷ் வெளியிட்டுள்ள பதிவில் அஜித்குமாரை கோயிலில் வைத்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது போன்று காவல் நிலையங்களில் சர்வசாதாரணமாக நடைபெறும் என்று சொல்கிறார். அஜித்தை குச்சியை வைத்து அடிப்பதை பார்த்து எல்லோரும் பதறுகிறார்கள். காவல் நிலையங்களில் போட்டு அடிப்பார்கள். அடித்து முடித்துவிட்டு டீ வாங்கி வர சொல்வார்கள். எடுத்தவுடன் வாடா போடா என்று சொல்வார்கள். இதெல்லாம் மனித உரிமை மீறல்கள். ஆனால் இதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது என்று சொல்கிறார். காவல் நிலையங்களுக்கு எல்லாம் மனித உரிமைகள், ஜனநாயம், அரசியலமைப்பு சட்டம் போன்றவை எல்லாம் தெரியாது.

இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று எல்லோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இப்படிபட்ட சூழலில் எப்படி தங்களின் கணவர்களை கைது செய்யலாம். 6 போலீசாரின் குடும்பங்கள் என்ன ஆவது என்று பெண்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். யார் இந்த பெண்கள்? அஜித் போன்றே இவர்களும் பாதிக்கப்பட்டனரா? என்று பார்த்தால், நாங்களாக செய்யவில்லை. மேல் அதிகாரிகள் சொல்லி தான் செய்தோம் என்கிறார். அந்த மேல் அதிகாரி சொல்லிதான் உங்களுக்கு சம்பளம் தரப்படுகிறதா? மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் உங்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. அந்த பெண் மிகவும் வெளிப்படையாக மேலதிகாரி சொன்னால் நாங்கள் செய்வோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லஞ்சம் வாங்குவது, சட்டத்திற்கு முறைகேடாக செயல்படுவது, அராஜகம் செய்வது போன்றவை எல்லாம் எதார்த்தமானது என்று சொல்கிறார். அப்போது மேலதிகாரி அரசியலமப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட சொன்னால் செய்யலாமா? மேலதிகாரி எப்ஐஆர் பதிவு பண்ணாமல், மண்படத்திற்கு தூக்கிச்சென்று அடித்தே கொல் என்று சொன்னால் செய்யலாமா? மிளகாய் பொடியை போட்டு அவனது வயிற்றை கருக வை. இயற்கை உபாதையை கழிக்க விடாதீர்கள்… தண்ணீர் தண்ணீர்… என்று கத்த கத்த அடி… ஆடைகளை அவிழ்த்து உள்ளாடைகளுடன் அடி என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? இப்படி எல்லாம் காவல்துறையில் நடைமுறையே கிடையாது.

குற்றம்சாட்டப்பட்டு, குற்றம் நிரூபமான ஒருவரை அடிக்கக்கூட காவல்துறைக்கு அனுமதி கிடையாது. ஆனால் அந்த அம்மா மேலதிகாரி சொன்னதால் செய்தார்கள் என்கிறார். அப்போது மேல் அதிகாரி, அஜித்குமாரை கொன்றுவிடு என்று சொல்லியுள்ளார். என்ன காரணம்? யாருக்கான ஆதாயம்? உண்மை வெளிவரக் கூடாதா? உண்மையிலேயே நகை தொலைந்து போனதா? அதெல்லாம் தெரிய வேண்டாம். அஜித்குமார் சிக்கியுள்ளார். அவர் மீது புகார். இனி அவன் உயருடன் வர வேண்டாம் என்று போட்டு அடித்துள்ளனர். அப்போது மேலதிகாரிக்கு என்ன தனிப்பட்ட வன்மம்?. அல்லது மேலதிகாரிக்கும், புகார் தெரிவித்த அந்த 2 பெண்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களின் புகாரை இவ்வளவு வீரியமாக எடுப்பதற்க என்ன காரணம்? யார் அந்த மேலதிகாரி? என்று இவ்வளவு விஷயங்கள் கேட்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் வாக்குமூலத்தை காவல் துறை சீர்திருத்த சட்டத்தில் மறுவரையறை செய்வதற்கும் ஒரு ஆதாரமாக  எடுத்துக் கொள்ளலாம். அஜித் மரண விவகாரத்தில் பொதுமக்கள், ஊடகம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியுன் திரண்டு நடவடிக்கை எடுத்தால் போலீஸ் மீதே கை வைப்பீர்களா? என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர் பேசுவது ஆணவம் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. மிகவும் வெளிப்படையாக செய்கிறார்.

என் புருஷன் ஒரு கொலைய பண்ணிட்டான். ஒரு அப்பாவியை அடித்துக் கொன்றிருக்கீங்க.. நீங்கலாம் ஒரு மனுஷனா… என்று கேட்டிருந்தால் அந்த அம்மா உண்மையில் ஒரு மனிதாபிமானம் உள்ள பெண் ஆவார். எவனோ சொன்னான் என்பதற்காக இப்படி செய்யலாமா? உன்னை என் புருஷன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தால் இந்த அம்மாவை தமிழ்நாடே கையெடுத்து கும்பிட்டிருக்கும். கைநிறைய நகைகளை போட்டுக்கொண்டு, அய்யய்யோ எங்க 6 குடும்பத்தை பற்றி நினைத்து பார்த்தீர்களா என்றால்? 6 குடும்பமும் ஒருவரின் உயிரை பற்றி நினைத்தீர்களா? உங்களுக்கு உங்க புருஷன் திரும்பி வந்துவிடுவார். ஆனால் அந்த பயனின் உயிர் போய்விட்டது. ஏழையாக பிறந்த பாவத்திற்காக, கிராமத்தில் சாமானிய குடும்பத்தில் பிறந்த ஒரே பாவத்திற்காக அந்த பையனின் உயிர் போய்விட்டது.

அஜித்குமார் பிறந்த சாதியில் ஒரு பணக்காரராக இருந்திருந்தால், அந்த போலீசார் இப்படி செய்திருப்பார்களா? ஸ்ரீகாந்த் என்கிற நடிகர் கொக்கைன் பயன்படுத்தியதற்காக கைது செய்தார்கள். அவரையும் இப்படி செய்யவீர்களா? அவருக்கு கொக்கைன் சப்ளை செய்த அரசியல்வாதியை இப்படி நடத்தினீர்களா? அப்போது இல்லாத வீட்டு பையன், கோவிலில் பகுதி நேர செக்யூரிட்டி. ஏதோ கோவிலில் 500-க்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். என்னடா நீ என்று அடிக்கிறார்கள். இதில் எவ்வளவு திமிரு, வஞ்சம் இருக்கிறது. என்ன அடாவடித்தனம் இருக்கிறது. ஆனால் அந்த போலீஸ்காரரின் மனைவி மேலதிகாரி சொன்னார். இவர் கொலை செய்தார் என்கிறார்.

அவரின் பேச்சுக்கள் காவல்துறையினர் குறித்து வரக்கூடிய எதிர்மறை விமர்சனங்களை உண்மை என்று நம்மை நம்ப தோன்றுகின்றன. நல்ல காவல்துறை நண்பர்களும் இருக்கிறார்கள். ஆனால் காவல்துறையின் சிஸ்டம் எப்படி இருக்கிறது. விடுதலைப் படத்திலும், விசாரணை படத்திலும் காவல்துறை எப்படி இருக்கிறது. அதில் நல்ல போலீஸ்காரனே இருந்தாலும் அந்த சிஸ்டம் எப்படி உள்ளது. மக்கள் விரோதமாக, குறிப்பாக தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்படுகிற மாதிரியே அந்த சிஸ்டத்தை அமைத்திருக்கிறார்கள். என்று இதுவரை வந்த விமர்சனங்கள் உண்மை என்று நம்புகிற வண்ணம் இந்த போலீசாரின் மனைவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவற்றை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆம்பள என்றால் பொம்பளய அடிக்கத்தான் செய்வான். போலீஸ்காரனா அடிக்கத்தானே செய்வான். மேலதிகாரி என்ன வேணா சென்னாலும் நாங்க கேட்கத்தான் செய்வோம் என்று தவறுகளை எதார்த்தமாக ஏற்றுக்கொள்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிடுவார்கள். ஒரு கொலை செய்துவிட்டு அதை நியாயப்படுத்தி இதில் என்ன இருக்கு என்று கேட்கிறார்கள். தற்போது பாதிக்கப்பட்டது அஜித்குமார் குடும்பம் அல்ல. தாங்கள் தான் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறது.

MUST READ