spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடெல்லியில் என்ன நடந்தது? எடப்பாடி எதை மறைக்கிறார்? ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

டெல்லியில் என்ன நடந்தது? எடப்பாடி எதை மறைக்கிறார்? ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

-

- Advertisement -

குருமூர்த்தி வருகையால் பாஜகவில் ஆர்எஸ்எஸ்-ன் கை ஓங்கியுள்ள நிலையில், அவர்களின் முதன்மையான நோக்கம் அதிமுகவை அழிப்பதாகவே இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

டெல்லியில் அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும், எடப்பாடியின் மகன் மற்றும் தொழிலதிபர் சந்திப்பில் இடம்பெற்றதன் பின்னணி குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பின்போது அவருடைய மகன் மற்றும் தொழிலதிபர் ஒருவர் உடன் சென்றுள்ளனர். அமித்ஷாவின் வீட்டிற்கு செல்லும்போது அரசு காரில் எடப்பாடி சென்றார். திரும்பி வருகிறபோது பென்ட்லி காரில் வெளியே வருகிறார். அப்படி வெளியே வரும்போது தான் கைக்குட்டையால் முகத்தை  துடைத்ததாக சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல்வாதி. அவர் யாருடன் போகிறார்? என்பதை கவனிக்க வேண்டியது பத்திரிகையாளர்களின் வேலை. அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி செல்கிற நிலையில், அவர் ஒன்றும் உங்களுடைய நீண்ட நாள் நண்பரோ, விளையாட்டு தோழரோ அல்ல.

கட்சிகளை எல்லாம் காலி செய்கிற ஒரு நபரை பார்க்க சென்றுள்ளீர்கள். அவரிடம் போய் உங்கள் கட்சி தொடர்பான விஷயத்தை தான் பேச போகிறீர்கள். இங்கு யாருக்கு அழுத்தம் உள்ளது? செங்கோட்டையன் போய் அமித்ஷாவை சந்தித்துள்ளார். டிடிவி, இபிஎஸ் முதலமைச்சர் என்றால் ஆதரவு கிடையாது என்கிறார். ஓபிஎஸ் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார். சசிகலா அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறார். இடையில் அண்ணாமலை பிரச்சினை செய்கிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி தான் பிரச்சினையில் உள்ளார். அவர் ஏதோ மன்றாடி கேட்பதற்காக தான் டெல்லிக்கு சென்றுள்ளார். அவருடைய மகனை உடன் அழைத்துச் சென்றதற்கு காரணம், மகன் மீது இருக்கும் வழக்கை வாபஸ் பெற சொல்லி இருக்கலாம். அல்லது புதிதாக ஒரு டீல் பேசப்பட்டிருக்கலாம். தொழிலதிபர் இருக்கும் போது டீல்தான் பேசியிருக்க முடியும்.

அமித்ஷா உடனான சந்திப்பில் எடப்பாடியின் மகனும், ஒரு தொழிலதிபரும் இருக்கும் போதுதான் சந்தேகம் ஏற்படுகிறது. பிறகு எதற்காக எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்க வேண்டும்? அவர் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தனிப்பட்ட வாகனம் மற்றும் முன்னாள் அமைச்சர்களை அனுப்பிவிட்டு சொகுசு காரில் வருகிறார். என்னை பொருத்தவரை எடப்பாடியின் மகன் சந்திப்புக்கு சென்றதால் அவர் தொடர்பான பிரச்சினை பேசப்பட்டு இருக்கும். மற்றொன்று கட்சி பிரச்சினை தொடர்பாக பேசி இருப்பார்கள். ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா உடனான சந்திப்பின்போது கட்சி பிரச்சினைகள் குறித்து பேசவில்லை. பாஜக தங்களின் கட்சி விவகாரங்களில் தலையிடாது என்று மிகவும் காட்டமாக சொல்லியுள்ளார்.

அப்படி இருந்தாலும் கூட நாங்கள் நம்புகிற இடத்தில் இல்லை. காரணம் செங்கோட்டையன் கட்சி விவகாரம் தொடர்பாக தான் பேசியதாக தெளிவாக சொல்லிவிட்டார். அப்போது, நீங்கள் கட்சி தொடர்பாக பேசவில்லை என்றால் நம்புவோமா? அமித்ஷா வீட்டில் இருந்து காரில் சென்றது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. அவர் யாரை பாதுகாக்கிறார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. அதுதான் பிரச்சினையாக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிமுகவில் என்ன மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்றால்? கணக்குகள் தான் மாறிள்ளது. அதிமுகவில் உள்ள தலைவர்கள் எல்லாம் பாஜகவின் விசுவாசிகளாக மாறியுள்ளதுதான் அந்த கணக்கு. செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா, எடப்பாடி பழனிசாமி என அனைவரும் பாஜகவின் விசுவாசிகளாகவே இருக்கிறார்கள். 2026ல் ஆட்சி வேண்டுமா? அல்லது அதிமுகவை காலி செய்ய வேண்டுமா? என்கிற குழப்பம் பாஜகவில் இருந்தது. மோடி – அமித்ஷாவின் நோக்கம் என்பது 2026ல் அதிமுக தலைமையில் ஆட்சியை பிடித்து, அதில் 4 பாஜகவினரை அமைச்சராக்கி எங்களால் தமிழ்நாட்டை ஆள முடியும் என ராகுல்காந்திக்கு பதிலடி தர வேண்டும் என்பதுதான்.

ஆனால் அதற்கு சற்று மாறுபாடாக ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளே வந்துள்ளார். அதன் பொருள் என்ன என்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கை பாஜகவில் ஓங்கி உள்ளதுதான். அதன்படி பார்க்கிறபோது மோடி – அமித்ஷாவின் நோக்கத்தை நிறைவேற்றுவது அவர்களுடைய திட்டம் கிடையாது. அதிமுகவை அழிப்பதுதான் அவர்களுடைய நோக்கமாகும். அந்த நோக்கத்தில் இருந்து பார்க்கிறபோது இந்த பிளவு, அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும். அதற்காக தான் அவர்கள் பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவில் இவர்கள் எல்லாம் அடித்துக்கொண்டால் நிச்சயமாக தவெக 2வது இடத்திற்கு வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் பாஜகவின் நோக்கம் நிறைவேறி விட்டது. தவெக ஒரு அரசியல் கட்சியாக பயணிக்கவில்லை. அதிமுக இந்த அளவுக்கு சிதைவுற்றிருக்கும் நிலையில் மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையில், ஒருவேளை தவெகவுக்கு வாக்களித்து அவர்கள் 2வது இடத்திற்கு வந்துவிட்டால் அதிமுகவின் அழிவு உறுதியாகிவிட்டது. 2011ல் எப்படி திமுக அழிப்பதற்கான ஆயத்த பணிகளை எல்லாம் செய்தார்களோ, எப்படி தேமுதிக 2வது இடத்திற்கு வந்து நின்றதோ, இவற்றை எல்லாம் தான் நான் சமிக்ஞைகளாக பார்க்கிறேன். அந்த இடத்தில் திமுக வீழ்ச்சி அடையாததற்கு காரணம் கலைஞர் மட்டும்தான். அதுபோன்ற ஒரு நபர் இன்றைக்கு அதிமுகவில் இல்லை.

பாஜகவினுடைய இலக்கு என்பது அதிமுகவினுடைய அழிவுதான். முன்பு இருமொழி கொள்கை, சமூக நீதி என அனைத்து விஷயங்களிலும் திமுக, அதிமுக ஒன்றாக தான் பயணித்து வந்தது. ஆனால், தற்போது அதிமுக அதில் இருந்து மாறுபட்டு, பாஜகவின் அஜெண்டாவிற்கு வருகிறது. அப்படி அதிமுக மாறினால் அது பாஜகவுக்கு தான் பாதிப்பு. எனவே அவர்கள் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதில் பாஜகவில் யாருடைய கை ஓங்கி இருக்கிறதோ அதை பொறுத்து அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ