ஆவடியை அதிரவிட்ட முதலமைச்சர்- உளவுத்துறை தகவலால் அமைச்சர் மகன் பதவி பறிப்பு.

சென்னை- பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜாவை ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


2022 ஆகஸ்டு மாதம் ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியை பெற்ற ஆசிம் ராஜா 5 மாதங்களிலேயே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி மாநகர திமுக செயலாளர் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த குழு தலைவராகவும் செயல்பட்டு வந்த ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சியின் மொத்த நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அவர் சொல்லும் நபருக்கு தான் ஒப்பந்தம், வேலை அனைத்தும் கிடைக்கும். மேயர், ஆணையர், மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் என எவரும் தன் விருப்பம் போல் செயல்பட முடியாமல் தவித்தனர்.
இது ஆவடி முழுவதும் வைரலாக பரவியது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படலாம் என்று உளவுத்துறை மேலிடத்திற்கு ரிப்போர்ட்டாக அனுப்பியது. அதை வைத்து பிப்ரவரி 7 -ந் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 2023ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற வேண்டிய மாநகராட்சி மாதாந்திரக் கூட்டம் நடைபெறவில்லை. அதற்கு காரணம் ஆசிம் ராஜா அனுமதி கொடுக்காததால் கூட்டம் நடைபெற வில்லை என்ற தகவலும் தலைமைக்கு சென்றுள்ளது. தொடர்ந்து ஜனவரி மாதம் வழங்க வேண்டிய சம்பளமும் அதிகாரிகளுக்கு காலதாமதமாகத்தான் வழங்கினர். இவையனைத்தும், செய்தியாகவும் வெளிவந்தது. இவை அனைத்திற்கும் ஆசிம் ராஜா தான் காரணம் என்று தலைமைக்கு உளவுத்துறை நோட் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆவடியில் 8 -ந் தேதி புதுமைப் பெண் 2 வது கட்ட திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் வந்த போது அமைச்சரின் மகன் பதவி பறிக்கப்பட்டது, இந்த நடவடிக்கை கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
