பொங்கல் விடுமுறை தொடங்க உள்ளதால் மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த மெரினா கடற்கரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதையை சென்னை மாநகராட்சி கட்டமைத்தது.


மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலையில் தொடங்கி மணல் பரப்பில் 380 மீ. நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த சிறப்பு பாதை அமைக்கப்பட்டது.
கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூபாய். 1.14 கோடி செலவில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை கடந்த டிசம்பர் 9ம் தேதி சேதமடைந்தது.
சிறப்பு பாதையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு, பருவமழைக் காலம் முடிந்ததும் முழுவதுமாக சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு பாதை சேதமடைந்து ஒரு மாத காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போதும் சிறப்பு பாதையின் view point பகுதி சீரமைக்கபடாமல் உள்ளன.
சேதமடைந்த மரப்பலகைகளும் அங்கேயே தேங்கி கிடக்கின்றன.
தற்போது, பொங்கல் விடுமுறை நாட்கள் தொடங்க உள்ளதால், கடற்கரைக்கு பொதுமக்களும் மாற்றுத்திறனாளிகளும் அதிக எண்ணிக்கையில் வரக்கூடும் என்பாதல் சிறப்பு பாதையின் view point பகுதியையும் விரைந்து சீரமைத்து தர வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


