துணை முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உடையவர் உதயநிதி ஸ்டாலின், என சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்த நாளையொட்டி சென்னை ஏழுகிணறு தங்கசாலை பகுதியில் அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், ‘‘முதலமைச்சரின் பணிகளுக்கு தோள் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றியாற்றுகிறார். கடந்த 7 ஆண்டுகளில் திமுகவின் முன்னேற்றத்திற்கும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடுபட்டவர் உதயநிதி ஸ்டாலின்.
பாஜக தமிழகத்தில் தகுதியில்லாத இயக்கம். இதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை பரிசாக மக்கள் அளித்தனர். அனைத்து தகுதியும் பொருந்தியவர் உதயநிதி ஸ்டாலின். அடுத்த கால்நூற்றாண்டில் திமுகவையும், தமிழக மக்களின் நலனையும் தனது தோளில் சுமக்க உள்ளார். துணை முதலமைச்சராவதற்கு அனைத்து தகுதியும் பொருந்தியவர் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.