தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும்,7 ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடி தெரிவித்துள்ளாா்.தேசிய கல்வி நிறுவன தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பொறியியல் பிரிவிலும்,7 ஆண்டாக ஒட்டுமொத்த பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. மேலும் ஆராய்ச்சியில் 2ம் இடமும், நிலைத்தன்மை, கண்டுபிடிப்பகள் ஆகிய பிரிவுகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இது குறித்து சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமக்கோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தொடர்ந்து 10ஆண்டுகள் ஐஐடி சென்னை முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவிலுள்ள 50,000 மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டதில் சென்னை ஐ.ஐ.டி முதல் இடம் பெற்றுள்ளது. வெளிப்படை தன்மையுடன் ஐ.ஐ.டி சென்னை தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தில் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியல் பிசினஸ் ஆக மாறிவிட்டது. அரசே இதுபோன்ற தரவரிசை பட்டியல் வெளியிடுவது இந்தியாவில் மட்டும் தான். வரும் காலங்களில் காப்புரிமை, புதிய கண்டுபிடிப்பு, ஸ்டார்ட் அப், உள்ளிட்டவைகளில் சென்னை ஐ.ஐ.டி அதிக கவனம் செலுத்த உள்ளோம்.
அதேபோல் நிலையான வளர்ச்சி குறிப்பாக தொழில்நுட்ப சார்ந்த பாடம் மற்றும் உயர்கல்வி சேர்க்கை எண்ணிக்கை இவற்றில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படும் பி. எஸ் பாட திட்டம் ஐ.ஐ.டியின் நேரடி கற்பித்தலுக்கு எந்த குறைவும் இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
ஐ.ஐ.டி சென்னை நடத்தும் பி.எஸ். பாடம் தரத்தில் இம்மியளவும் குறையாமல் சர்வதேச அளவில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டியில் மட்டும் 49,000 மாணவர்கள் ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டு ஏரோநாட்டிக்கல் மற்றும் பொருளாதாரம் குறித்த பி.எஸ் பாடத்திட்டம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது சென்னை ஐ.ஐ.டியில் 12 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பி. எஸ் படிப்பில் சேர்வது எளிதாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வரும்போது ஐ.ஐ.டி தரத்தில் எந்த குறைவும் இல்லாமல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற கேட் தேர்வில் நமது பி.எஸ் டேட்டா சயின்ஸ் மாணவர்கள் முதல் 10 இடங்களில் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர், என்றார்.
தொடர்ந்து தனி பேட்டி அளித்த காமகோடி, ”அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர், ஐ.ஐ.டி அட்வான்ஸ் தேர்வுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுகிறது. மாநில பாடத்திட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். தொடர்ந்து பத்து ஆண்டுகள் விருது பெறுவது என்பது சாதாரண காரியம் அல்ல. இதன் மூலம் எங்களுக்கு பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் சவால்கள் அனைத்திலும் ஐ.ஐ.டி மெட்ராஸின் பங்கு இருக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என இலக்காக கொண்டு செயல்படுகிறோம்” என்று கூறியுள்ளாா்.
பிரேம்ஜி வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி…. வைரலாகும் புகைப்படங்கள்!