“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது; பொதுவெளியில் அநாகரிகமாகப் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோவை வெளியிட்ட தவெக அமைச்சர் சரத்குமாரை முதலமைச்சர் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தவெக அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. பெண்கள் பாதுகாப்பு குறைபாடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அமைச்சர் சரத்குமாரின் சர்ச்சை வீடியோ ஆகியவற்றைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை போராட்டத்திற்காக மேடை அமைக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட்டிருந்தபோது, காவல்துறையினர் முறையாக அனுமதி வழங்க மறுத்து, மேடை அமைக்க வந்தவர்களைத் தீவிரவாதிகளைப் போலக் கருதி குண்டுகட்டாகக் கைது செய்தனர்.

கைது நடவடிக்கைகளையும் மீறி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் எழும்பூர் பகுதியில் திரண்ட ஏராளமான திமுகவினர் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பினர். “தவெக அரசின் சாயம் வெளுத்துப்போச்சு”, “போதை என்பது மாத்திரையா, கொக்கைன் என்ன சாக்லேட்டா?” போன்ற கோஷங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த நாங்கள் முறையாக அனுமதி கேட்டிருந்தோம். கடந்த திமுக ஆட்சியில் யார் போராட்டம் நடத்த அனுமதி கேட்டாலும் அதற்கு ஜனநாயக ரீதியாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தவெக ஆட்சியில் காவல்துறையினர் அனுமதி தராமல் காலையிலேயே கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு கடந்த ஒன்றரை மாதத்தில் முற்றிலுமாகச் சீர்குலைந்து கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் குடிநீர், மின்சாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மறைந்த பாக்யராஜ் அவர்களின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திலேயே சுமார் 4 மணி நேரம் மின்சாரம் இல்லாத அவல நிலையே நீடித்தது.
கடந்த திமுக ஆட்சியில் 80 லட்சம் மாணவர்களைத் திரட்டி போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினோம். ஆனால், அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் செய்த போதைப்பொருள் தொடர்பான செயல் கடும் கண்டனத்திற்குரியது. உயர் ரக போதைப்பொருள் ஒட்டாமல் இருக்க டெபிட் கார்டு, 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி, புத்திசாலித்தனமான போதைப்பொருள் உபயோகிப்பாளர்கள் செய்வதைப் போன்ற வீடியோவை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
குழந்தைக்கு மாத்திரை நசுக்கத்தான் அப்படிச் செய்தேன் என அமைச்சர் தற்போது பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். எந்தவொரு 5 வயதுக் குழந்தைக்கும் மருத்துவர்கள் அப்படி மாத்திரை தருவதில்லை. அரசு சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் நடத்திய அடுத்த நாளே, ஒரு அமைச்சர் பொதுவெளியில் உயர் ரக போதைப்பொருளை நசுக்குவது போன்ற ரீல்ஸ் வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்?”
”இந்த அநாகரிகச் செயலுக்கு முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? அமைச்சரின் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தவறு செய்த அமைச்சரைக் குறைந்தபட்சம் பதவியிலிருந்தாவது நீக்க வேண்டியது முதலமைச்சரின் ஜனநாயகக் கடமை. முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். காவல்துறையை ஏவி எங்களை ஒடுக்க நினைத்தால், எங்களது தலைமை அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் தழுவிய தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
