விரைவில் வேளச்சேரி- பரங்கிமலை இடையே பறக்கும் ரயில்
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் பணி ஒரிரு மாதத்தில் முடிக்கப்பட்டு பறக்கும் ரெயில் சேவை இயங்கும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “வெள்ளத்தினால் மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக முதலமைச்சர் ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். மேலும் மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்காக கூடுதலாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். ஐயப்பந்தாங்கல், பரணிபுத்தூர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.120 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் நிலையத்தை நீடித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நிதி ஒதுக்கி அறிவித்தார். 3 கிலோ மீட்டர் தூரத்தில் 2 கிலோ 400 மீட்டர் தூரம் தூண்கள் அமைத்து பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது. 600 மீட்டர் தூரம் பணியை கடந்த 10 ஆண்டுகளாக செய்யாமல் அதிமுக ஆட்சியில் நிலுவையில் வைத்திருந்தார்கள். தற்போது அந்த பணி விரைவாக நடந்து வருகிறது. ஒரிரு மாதங்களில் பறக்கும் ரெயில் பணி முடிந்து முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்” எனக் கூறினார்.