Homeசெய்திகள்சென்னைதிராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதை பார்க்க முடிகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

திராவிட முன்னேற்ற கழக சார்பில் இஸ்லாமியர்களின் இப்தார் புனித ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்வு சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. திமுக தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக அபுபக்கர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா, வக்பு வாரிய தலைவர் அப்துல்ரகுமான், தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப்,அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான்,ஆவடி சா.மு.நாசர் மா.சுப்பிரமணியம், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை பெருநகர மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இது திமுக இப்தார் நிகழ்ச்சி மட்டுமல்ல. அனைத்து இஸ்லாமிய மக்களின் விழாவாக நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மதத்தினரும் வந்துள்ளனர். அதனால் மத வேறுபாடு கிடையாது. ஒற்றுமையை வலுப்படுத்தும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழகத்தின் சார்பில் இதுபோன்ற இப்தார் நிகழ்ச்சிகளை மறைந்த மஸ்தான் அவர்கள் முன்நின்று செய்வார்கள். அவர் மறைந்த பிறகு தற்போது துறைமுகம் காஜா அவர்கள் முன்நின்று ஏற்பாடு செய்துள்ளார்.

துறைமுகம் காஜாவை பார்த்தால் அமைதியாக இருப்பார். ஆனால் அவர் கடந்த1989 ஆம் ஆண்டு கருணாநிதியை எதிர்த்து துறைமுகம் தொகுதியில் நின்றவர். இருந்தாலும் தேர்தல் முடிந்தும் கழகத்தில் இணைந்து விட்டார். தற்போது தலைமை நிலைய செயலாளராக உள்ளார். இது நிகழ்ச்சி ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்ச்சி. திமுக ஆட்சிக்கு வந்ததும்‌ சிறுபான்மையினர் இஸ்லாமியருக்கு பல திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் தான் முதல் முதலில் மிலாதுநபிக்கு விடுமுறை அறிவித்து கருணாநிதி அறிவித்தார். ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மிலாதுநபிக்கு இருந்த விடுமுறையை ரத்து செய்தார். ஆனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்தையே ரத்து செய்து மீண்டும் முலாதுநபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது‌.

அதேபோல் இஸ்லாமிருக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. இது திமுக ஆட்சி. மன்னிக்கவும் இது நம்ம ஆட்சி. 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியருக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோரிக்கை வைக்காமலேயே பல திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது. கோரிக்கை வைக்காமல் செய்யும் இந்த அரசு கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா? இது திராவிட மாடல் அரசு, கருணாநிதி வழியில் நடைபெறும் அரசு. உங்களுக்கான அரசு. எல்லோரும் எல்லாம் என்று நெறிமுறைப்படி இயக்கும் அரசு. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதை நாம் பார்க்கிறோம்.

இந்தியாவை காப்பாற்றும் ஆற்றல் சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய மூன்று கருத்துகளுக்கு தான் உண்டு. இந்த மூன்று கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் ஒன்றிணைய வேண்டும். இந்த ஒற்றுமை என்பது தேர்தலுக்கானது மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்துக்காக ஏற்பட வேண்டும்” என உரையாற்றினார்

MUST READ