த.வெ.க தலைவர் விஜய் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை. காகிதங்களில் எழுதி அனுமதி கேட்டால் வாங்கி வைத்துக்கொள்ளப்படும் ஆனால் அனுமதி வழங்கப்படாது. நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு உரிய முறையில் விண்ணப்பித்தால் தான் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என தோ்தல் அதிகாாி விளக்கம் அளித்துள்ளாா்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களின் முதல்கட்ட ஒதுக்கீடு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் நடைபெற்றது.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், FLC (முதல்நிலை சரிபார்ப்பு) முடிந்த பின், இயந்திரங்கள் தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பப்படுகிறது. தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த சட்டப் பேரவை பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் 4,079 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான 13,841 வாக்குப்பதிவு இயந்திரங்கள்(20% ரிசர்வ் உட்பட), 6,604 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்(கண்ட்ரோல் யூனிட்), 7,310 விவிபேட் இயந்திரங்கள் கணினி வழியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இயந்திரங்களை தொகுதி வாரியாக பிரித்து வைக்கும் பணி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு கிடங்கில் நடைபெறுகிறது. இந்த பணிகள் இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதல் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்புக் கருவிகளின் பட்டியலும் அனைத்துப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பகிரப்பட உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் ஆய்வு மேற்கொண்ட பின்னா் செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது அவா், “தனியார் இடங்களில் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யும்போது “சுவிதா” செயலி மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளார் என்ற கேள்விக்கு,
விஜய் பிரச்சாரம் செய்வதற்கான அனுமதி மறுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு “சுவிதா” செயலி மூலமாக அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தேர்தல் தொடர்பான பிரச்சாரத்திற்கு செல்லுதல் அல்லது கட்சிக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான அனுமதியை “சுவிதா” செயலி மூலமாக விண்ணப்பித்து பெற வேண்டும்.
அரசியல் கட்சி கூட்டம் நடத்துவதற்கு உள்ள இடங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாதது மக்களுக்கு இடையூறு இல்லாத காவல்துறையின் தடையின்மை சான்று பெற வேண்டும். அதேபோல மேடை அமைத்து பிரம்மாண்டமாக நடத்துவதாக இருந்தால் தேவை ஏற்படும் பொதுப்பணி துறையின் தடையின்மை சான்று பெற வேண்டும்.
ஆர்ஓ விடம் (RO) ஆன்லைன் வாயிலாக அனுமதி பெற விண்ணப்பிக்கும் போது காவல்துறையின் தடையின்மை சான்று, தேவைப்பட்டால் பொதுப்பணி துறையின் தடையின்மை சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நாளை பிரச்சாரத்திற்கு செல்கிறோம் என்று காகிதத்தில் எழுதிக் கொடுத்தால் அனுமதி வழங்கப்படாது அதற்கான நடைமுறைகள் உள்ளது. அதனை பின்பற்றி இணையவழியின் மூலமாக விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்கள் அரசியல் நிகழ்வுகளுக்காக கேட்டால் அவற்றிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது சுவிதா செயலி செயல்பாட்டில் தான் உள்ளது நிறைய அரசியல் கட்சியில் இருந்து விண்ணப்பம் வருகிறது நாங்கள் அனுமதியும் கொடுத்து வருகிறோம். அனுமதி மறுக்கப்பட்டால் அதற்கான காரணங்களையும் நாங்கள் தெரிவித்து விடுகிறோம்.
ஆர்ஓ-க்கள் தான் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனுமதியை கொடுக்க வேண்டும். 48 மணி நேரத்திற்கு முன்பாக அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மூன்றில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் அரசியல் கட்சிகளுக்கான பிரச்சார அனுமதி கொடுக்கப்படுகிறது. காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் தடையின்மை சான்று கிடைப்பதில் சிக்கல் இருந்தால் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.
காகிதங்களில் அனுமதிக்க கடிதம் வழங்கினால் பெற்று வைத்துக் கொள்வோமானால் அதற்கு அனுமதி வழங்க முடியாது இணைய வழியில் விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்க முடியும். எந்தெந்த இடங்களில் எவ்வளவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து காவல்துறையினர் முடிவு செய்வர்.
தற்பொழுது வரை விஜய் பிரச்சாரத்திற்கான அனுமதி வழங்கப்படவில்லை. காவல்துறையினரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வந்ததற்கு பிறகுதான் அனுமதி குறித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல் அளித்துள்ளாா். இருப்பினும் ஆலோசனையில் விஜய் குறித்த நேரத்திற்கு வரவேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தவெக மாவட்ட செயலாளர் சிவா, தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
