ஆடி மாதப் பிறப்பையொட்டி மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், வாடகை வீட்டில் தனியாக இருந்த கேரள இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தொல்லை கொடுத்த மருந்து விற்பனை பிரதிநிதியை, வழக்கறிஞர் உள்பட ஐவர் கொண்ட கும்பல் அடித்துச் சித்திரவதை செய்து 5 லட்சம் ரூபாய் மிரட்டல் விடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் உள்பட 5 பேரை சூளைமேடு போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை சூளைமேடு பத்மநாப நகரைச் சேர்ந்தவர் சுதர்சன் (30). பி.எஸ்சி பட்டதாரியான இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக மருந்து விற்பனை பிரதிநிதியாக (Medical Representative) பணிபுரிந்து வருகிறார். இவருக்குக் கிருஷ்ணவேணி என்பவருடன் திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகின்றன. இதனிடையே, கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஆடி அழைப்புக்காகக் கிருஷ்ணவேணி தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மனைவி இல்லாத தனிமையைச் சாதகமாகப் பயன்படுத்திய சுதர்சன், கடந்த ஜூலை 24-ஆம் தேதி நள்ளிரவு தங்களது வீட்டின் கீழே வாடகைக்கு வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த தனியார் மளிகை டெலிவரி நிறுவனப் பெண் ஊழியரான நமீதா (21 என்பவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். “உன்னை எனக்குப் பிடித்துள்ளது, திருமணம் செய்து கொள்ளலாம், தனியாக வீடு எடுத்து ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறி ஜொள்ளுவிட்டுள்ளார். சுதர்சனின் இந்த உத்தேசப் பேச்சை நமீதா தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு (Voice Record) செய்து வைத்துள்ளார்.
மிரட்டலும் பணக் கேட்டலும்
கடந்த ஜூலை 26-ஆம் தேதி நமீதாவும் ஒரு இளைஞரும் சுதர்சனை நேரில் சந்தித்து, அவர் பேசிய ஆடியோ பதிவைக் காட்டியுள்ளனர். இதனால் அதிர்ந்துபோன சுதர்சன் அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுள்ளார். அப்போது நமீதா எச்சரித்து அனுப்பிவிட்டாலும், மறுநாள் இரவு வாட்ஸ்அப் மூலம் லொக்கேஷன் அனுப்பி சூளைமேடு தமிழர் வீதிக்குச் சுதர்சனை வரவழைத்துள்ளனர். அங்கு வழக்கறிஞர் மோனிஷா, நமீதா, சிவரஞ்சனி மற்றும் சில ஆண்கள் சேர்ந்து சுதர்சனை ஒரு வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். “நமீதாவிடம் தவறாகப் பேசியதற்கு 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும், இல்லையெனில் போலீசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளுவோம்” என்று கூறி மிரட்டியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால், சில நாட்கள் அவகாசம் அளித்து அனுப்பியுள்ளனர்.
பின்னர் ஜூலை 29-ஆம் தேதி மீண்டும் அவரை வரவழைத்து, பணம் கேட்டுப் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதுடன், அவரது இடது காதில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். “முதலில் 2 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்து கொண்டு வா” என்று கூறி கடும் சித்திரவதை செய்து அனுப்பியுள்ளனர்.
மனைவியிடம் அழுது புரண்ட கணவன் & போலீஸ் அதிரடி
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஆடி அழைப்பு முடிந்து வீடு திரும்பிய மனைவி கிருஷ்ணவேணியிடம், நடந்த அனைத்துக் கொடுமைகளையும் கூறி சுதர்சன் அழுதுள்ளார். உடனே கணவனை அழைத்துக்கொண்டு சூளைமேடு காவல் நிலையத்திற்குச் சென்ற கிருஷ்ணவேணி புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், சட்டவிரோதமாகச் சிறை வைத்தல், மிரட்டல் விடுதல் மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்ட
- வழக்கறிஞர் மோனிஷா (26)
- மோனிஷாவின் கணவர் பாலகிருஷ்ணன் (30)
- நமீதா (21)
- கணேஷ் (28)
- சிவரஞ்சனி (21)
ஆகிய 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களைச் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். மனைவியை விட்டுப் பிரிந்திருந்த சில நாள்களில் தவறான எண்ணத்தால் ஒரு இளைஞருக்கு நேர்ந்த இந்த சோக முடிவும், சட்டத்தைக் கையில் எடுத்த கும்பலின் கைதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
