அம்பத்தூர் பகுதியில் தீப்பற்றி முழுவதும் எரிந்த தொழிற்சாலை அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்ததால் நள்ளிரவில் பரபரப்பு.. விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்
சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் காமாட்சி லேம் பேக் எனப்படும் தனியார் தொழிற்சாலை கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 70 நபர்கள் வரை பணி புரிந்து வருகின்றனர். அங்கு பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் காயின்கள், எழுதுகோளில் பயன்படுத்தக்கூடிய மை மற்றும் பேப்பர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, நள்ளிரவு 11:30 மணி அளவில் திடீரென தொழிற்சாலையிலிருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அருகே உள்ள தொழிற்சாலையை சேர்ந்த நபர்கள் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் அம்பத்தூர் மற்றும் ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் தீ மலமலவென தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்கு முழுவதும் பரவியது,இதில் அங்கிருந்த பேப்பர், மை, பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தும் தீப்பற்றி எறிய துவங்கியது, இதனை அடுத்து அருகே உள்ள அண்ணாநகர், ஆவடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட 12 தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், 30க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் இறங்கினர்.
இதனையடுத்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் அந்த தொழிற்சாலை முழுவதும் தீக்கிரையாகி கருகியது. மேலும் தீயணைப்பு விரர்கள் விரைந்து செயல்பட்டதால் அடுத்தடுத்து உள்ள தொழிற்சாலைகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்பட்ட நிலையில், வான்நோக்கி எழுந்த கருப்பு புகையால் சென்னை புறநகர் பகுதியில் நள்ளிரவில் திடீரென பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டும் இதே நிறுவனத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.