சென்னை விமான நிலைய புதிய முனையம், சென்னை கோவை இடையே வந்தே பாரத் அதிவிரைவு புதிய ரயில் உள்ளிட்ட சில தொடக்க விழாவிற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 8 ஆம் தேதி பிற்பகல் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
அன்று இரவு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் செல்கிறார். சென்னை நகருக்குள் சாலை போக்குவரத்தை தவிர்த்து, ஹெலிகாப்டர் பயணம் செய்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயிலை புதிதாக இயக்குவது, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் 8 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
அங்கு பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன விமான நிலைய முனையத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.
அதன் பின், சென்னையில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐ என் எஸ் அடையார் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார். தமிழ்நாட்டில் முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத், சென்னை-கோவை- சென்னை இடையே அதிவிரைவு ரயிலை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காரில், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் வந்து, அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதன் பின் மீண்டும் காரில் ஐ என் எஸ் அடையார் சென்று, அங்கிருந்து இந்திய விமான படை ஹெலிகாப்டரில், பல்லாவரம் இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல் கம்பெனி பின்புறம் உள்ள ராணுவம் மைதானத்திற்கு செல்கிறார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து, சென்னை விமான நிலையம் புதிய முனையத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
அந்த விழாவை முடித்துவிட்டு, பிரதமர் மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு பிரதமருக்கு வழி அனுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின் பிரதமர் நரேந்திர மோடி இரவு 8:45 மணியளவில், தனி விமானத்தில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் சென்னை வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பத ற்காக டெல்லியில் இருந்து, எஸ் பி ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று இன்று இரவு 7:15 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்கின்றனர்.
நாளை சென்னை பழைய விமான நிலையத்தில் எஸ் பி ஜி, ஐ ஜி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில், பிரதமரின் சென்னை நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள, பிரதமரின் நிகழ்ச்சிகளின் நேரங்களில், சிறிய அளவில் மாற்றங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் பிரதமர், பொது மக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, சென்னை நகருக்குள் சாலை வழி பயணத்தை கூடிய மட்டிலும் தவிர்த்து, ஹெலிகாப்டர் பயணத்தை மேற்கொள்வார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.