அம்பத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம் – வியாபாரிகள் சாலை மறியல்
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்து வந்த சாலையோர வியாபார கடைகள் அகற்றப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் ஏழுக்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகளை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர் தொழிற்சாலைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தொழிற்சாலை உற்பத்தியாளர் சங்கத்தினர் மற்றும் சிட்கோ நிர்வாகம் சார்பில் இதனை அகற்ற முடிவுசெய்து அகற்றி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் என அடையாள அட்டை பெற்று விற்பனை செய்து வரும் வியாபாரிகளை திடீரென அகற்றுவதால் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் விற்பனை செய்து வரும் இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையை மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரபல உணவகங்கள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இந்த ஆக்கிரமிப்பு அகற்றுப்பணி நடைபெறுவதாக வியாபாரிகள் குற்றம் சாடுகின்றனர்.