Homeசெய்திகள்சென்னைதிருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

-

திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆவடி அடுத்த கோவில் பதாகை எரி சும்மர் 570 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இங்கு 80 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்படுகிறது.இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மழை நீர் மழை காலங்களில் ஏரி நிரம்பி அருகில் உள்ள மங்களம் நகர், டிரினிட்டி அவென்யூ, எம்.சி.பி நகர், கிருஷ்ணா அவென்யூ, கிறிஸ்து காலனி, செகரட்டரி காலனி உள்ளிட்ட பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், தொடர் மழையில், கலங்கள் வழியாக வெளியேறும் வெள்ளத்தின் அளவு அதிகரிக்கும் போது, ஏரியை ஒட்டியுள்ள கலைஞர் நகர், பிருந்தாவன் நகர் மற்றும் ராஜீவ் காந்தி நகர் பகுதிகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஏரியை ஒட்டியுள்ள கணபதி அவென்யூ வழியாக ஏரி உபரி நீரானது வெளியேறுகிறது இதனால் மழை நின்றும் தண்ணீர் வடியாமல் மக்கள் அவதி அடைவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கோவில் பதாகை ஏரியில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார்,நீர்வளத்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் மற்றும் ஏரி உபரி நீர் தேங்காத வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும் கோவில் பதாகை ஏரியின் இரண்டு மதகுகளில், ஒன்றினை உடனடியாக மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக மூடி உபரி நீரை ஒரு மதகு வழியாக வடிய செய்ய அறிவுறுத்தினார்.நிரந்தர தீர்வாக அடுத்த பருவ மழைக்குள் ஏரி உபரி நீர் கிருஷ்ணா கால்வாயில் செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்கும் சாத்தியகூறுகளை ஆய்வு செய்ய நீர்வளத்துறை,வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஒட்டி போடப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் எதற்காக போடப்பட்டுள்ளது,குடியிருப்பு பகுதிகள்,அருகில் உள்ள ஏரி சார்ந்த பிரச்சினைகள் குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் பாலைவனத்தில் கால்வாய் போடுவது போல அமைத்துள்ளார்கள் என கடிந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

ஆவடி மாநகராட்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல்வேறு வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை பலன் கொடுத்துள்ளது. கோவில்பதாகை ஏரியில், உபரி நீர், சாலையில் வெளியேறுவதை தடுக்க, அதிகாரிகள், அமைச்சருடன் கலந்தாலோசித்து உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன அவற்றை அகற்றுவதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. நீதிமன்றத்தில் சில வழக்குகள் உள்ளன அவற்றின் வரும் உத்தரவுகள் அடிப்படையில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்த மழையானது வெள்ள தடுப்பு பணிகளில் எங்கு குறை உள்ளது என காட்டியுள்ளது,அடுத்த பருவமழையை சிறப்பாக கையாள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த இரண்டு நாட்களும், மாவட்ட நிர்வாகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து மக்களை பாதுகாப்பாக வைத்திருந்தோம். 62 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, 3200 மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தற்போது முகாம்களில் தங்கவைக்கபடிருந்த அனைவரும் வீடு திரும்பி விட்டனர் என தெரிவித்தார்.

MUST READ