தேமுதிக கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டதன் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியை ஏற்றி கொடி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். கேப்டன் முரசு மாத இதழையும் , கேப்டன்.காம் என்ற இணையதளத்தையும் பிரேமலதா தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேமுதிக கொடிநாள் வெள்ளி விழாவை நலத்திட்ட உதவிகளுடன் ஒரு மாதம் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அதிமுக உடன் கூட்டணி அமைத்த போதே ராஜ்யசபா இடம் கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம், என்றார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, அதுபற்றி தேமுதிக கருத்து கூற விரும்பவில்லை. அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேறொரு கருத்தை கூறியுள்ளார்.இதில் எது உண்மை, எது பொய் என்பதை அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும், என்றார்.
விஜய்யுடன் நாங்கள் கூட்டணி அமைப்பீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அதை “நீ” விஜயிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இருபது வருடக் கட்சி, இந்த கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது. ஏற்கனவே நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், என ஆதங்கமாக தெரிவித்தார். முதல்வர் மருந்தகம் திறப்பது குறித்த கேள்விக்கு, முதல்வர் மருந்தகம் திறப்பது வரவேற்பதக்கது. ஆனால் காலதாமதமானது. தேர்தலுக்காக திறக்கப்படுகிறது.
ஏற்கனவே மத்திய அரசு இதே திட்டம் வைத்துள்ளது.ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த திட்டம் இருந்தது, அதனை பின்பற்றி இன்று இவர்கள் அறிவிக்கின்றார்கள், இது தாமதமான ஒன்று, மக்களுக்கான திட்டமாக இருந்தால் வெற்றி பெற்று வந்த போதே அறிவித்திருக்க வேண்டும், இவ்வளவு நாட்களுக்கு பின்பாக அறிவிப்பது கண் துடைப்பு தான் என்றார்.
விஜய் அரசியலில் எடுபடுவாரா? என்ற கேள்விக்கு, அவர் எடுபடுவாரா, இல்லையா என்பது எனக்கு எப்படி தெரியும்? நான் என்ன ஜோசியமா பார்க்கிறேன்? என்று பதில் கேள்வி கேட்டார்.