விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகை திருட்டு
சென்னை அபிராமபுரத்தில் உள்ள பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகை திருடு போயிருக்கிறது. டிசம்பர் மாதம் திருடு போன நகைகள் குறித்து கடந்த மாதம் தான் அவருக்கு தெரியவந்துள்ளது.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள பிரபல பின்னனி பாடகர் விஜய் ஜேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகை அதே போல வைர நகைகள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக இவரது வீட்டில் பணியாற்றக்கூடிய நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்திய பின்னணி பாடகர் யேசுதாஸின் இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ். இவரது மனைவி தர்ஷனா பாலகோபால். இவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டை அபிராமபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவரது பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் வைரம் பதித்த சில தங்க நகைகளை கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி பார்த்துள்ளார். அதன்பிறகு கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நகை இருந்த அலமாரியை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை.
இது தொடர்பாக குடும்பத்தினரிடம் தர்ஷனா பாலகோபால் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக கணவர் விஜய் ஜேசுதாஸ் இடம் தெரிவித்திருக்கிறார். அவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் அபிராமபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் பணியாற்றக்கூடிய நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அளித்த புகார் என்பதால் அவர்களிடம் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். முதற்கட்டமாக 60 சவரன் நகை மற்றும் வைரம் கற்கள் பதித்த சில நகைகளை காணவில்லை என புகார் மனுவில் தெரிவித்து இருக்கிறார்கள்.
தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் பணியாற்றக்கூடிய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவிலேயே யார் யாரெல்லாம் அந்த நகையை திருடினார்கள், அவர்களுக்கு இந்த திருட்டில் தொடர்பு இருக்கிறதா என்றும் எப்படி திருட்டுப் போனது என்ற விவரங்கள் தெரியவரும்.