ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘கூலி’ திரைப்படம் வெளியானது. அதே சமயம் ரஜினி, ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது தவிர மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் கேமியோ ரோலில் நடிக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் கசிந்தன.
அதன் பின்னர் இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே. சூர்யா, நடிகை பூர்ணா ஆகியோர் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், இவ்வாறு பல நட்சத்திரங்கள் படத்தில் இணையும் தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் திரைக்கு வரும் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


