பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் குடிபோதையில் சென்னை விமான நிலையத்தில் தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் ஜெய், சமுத்திரக்கனி, சசிகுமார், சுவாதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற மதுரை குலுங்க எனும் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடலை பின்னனி பாடகர் வேல்முருகன் பாடியிருந்தார். அதைத் தொடர்ந்து நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா எனும் பாடலையும் ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால எனும் பாடலையும் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். பல்வேறு விருதுகளை வென்ற இவர் மேலும் பல படங்களுக்கும் பாடல்களை பாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று வேல்முருகன் இண்டிகோ ஏர்லைன் மூலமாக திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு இவர் குடிபோதையில் இருப்பதை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுப்பவில்லை. இதனால் வேல்முருகன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவர் செல்ல இருந்த விமான பயணத்தை ரத்து செய்தனர். அதைத் தொடர்ந்து வேல் முருகன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்ட பின்னர் அவரை வேறொரு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வாக்குவாதத்தின் போது வேல்முருகன் குடிபோதையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


