பிரித்விராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் பல படங்களை தயாரித்து வரும் பிரித்விராஜ், லூசிபர், ப்ரோ டாடி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மோகன்லால் நடிப்பில் லூசிபர் 2 எம்புரான் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவர் பிளஸ்ஸி இயக்கிய ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் பிரித்திவிராஜுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இப்படத்தை விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் பென்யமின் எழுதிய கோட் டேஸ் என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளஒரு சர்வைவல் படமாக தயாராகியுள்ளது.
இத்திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 10ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை (மார்ச் 9) மதியம் 12 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.