போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று மாலை தீா்ப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக வழக்கில் அதிமுக பிரமுகா் பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்டாா். இதில் நடிகா் ஸ்ரீகாந்த், பிரசாத் தன்னை வைத்து படம் தயாரித்துள்ளார். எனக்கு பிரசாத் ரூ.10 லட்சம் தரவேண்டும். அதனை கேட்கும் போது கொகைன் போதைப்பொருள் கொடுத்து பிரசாத் தான் பழக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்தாா். அதே போல் போதைப் பொருள் வழக்கில் கடந்த 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்க கூடிய சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி ஷர்மேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல்துறை விசாரணைக்கு அழைத்த போது உரிய ஒத்துழைப்பு அளித்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்துள்ளதாகவும், கிருஷ்ணாவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமை மீறிய செயல் என்றும் வாதிட்டார். அதுமட்டுமல்லாமல், எதன் அடிப்படையில் நடிகா் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார் என்ற காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவருடைய வாதத்தில் குறிப்பிட்டார்.இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடிகர் ஸ்ரீகாந்திடமிருந்து போதைப்பொருள் எதும் கைப்பற்றப்படவில்லை என்றும், போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்தார். இந்த இரண்டு தரப்பு மனுகளுக்கும் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனைக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதனை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகா் கிருஷ்ணா ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார். நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.