நடிகர் விக்ரம் தனது கடின உழைப்பினால் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வீர தீர சூரன் எனும் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. அதற்கு முன்பாக இவர் தங்கலான் எனும் திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். பா ரஞ்சித் இந்த படத்தை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். கிஷோர் குமார் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடிக்க வில்லனாக டேனியல் கால்டகிரோன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மிகுந்த ஆவலுடன் படத்தைக் காண ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் நடிகர் விக்ரம், ரசிகர்களுடன் தங்கலான் படத்தைக் காண சென்னை, சத்யம் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் சொன்ன தகவலின் படி நடிகர் விக்ரம் இந்த படத்திற்காக தனது இதயம், ஆத்மா என அனைத்தையும் கொடுத்திருக்கிறார். எனவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இமாலய வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.