நடிகர் அஜித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்து, அஜித்தின் கேரியரில் அதிக வசூலை வாரிக் குவித்தது. இதைத்தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து தனது 64வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஏகே 64’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
இது தவிர இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆங்கில டைட்டிலுடன் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அஜித்தை இயக்க இருப்பதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது இந்த படமானது அஜித்தின் 65ஆவது படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பல முன்னணி நடிகர்களை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி ட்ரெண்டிங் இயக்குனராக மாறி உள்ள லோகேஷ், அஜித்தை எப்போது இயக்குவார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வந்த நிலையில், இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் எனவும் பேச்சு அடிபடுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், லோகேஷ் – அஜித் இணைய இருக்கும் இந்த புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


