இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படம் ‘அரசன்’. இத்திரைப்படத்தின் சுமார் 8 நிமிடங்கள் கொண்ட சிறப்பு ப்ரோமோ வீடியோவை இந்தத் தீபாவளி விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான பின்னணி வேலைகளும் நடைபெற்று வந்த நிலையில், தணிக்கைக் குழுவின் சான்றிதழும் பெறப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த 8 நிமிடக் காட்சிகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை அமைத்துக் கொடுக்க வேண்டியிருந்தது. அனிருத்தின் திருமணம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளதால், அவர் தனது திருமணக் கொண்டாட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாகவே, அவரால் பின்னணி இசைப் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுக்க முடியாமல் போனதாகவும், படக்குழுவினரால் அவரை உடனடியாகத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
‘அரசன்’ திரைப்படத்தின் மிக முக்கியமான இந்தக் காட்சிகளுக்கு அனிருத்தின் மாஸான பின்னணி இசை அவசியம் என்பதால், இசை இல்லாமல் அரைகுறையாக ப்ரோமோவை வெளியிட முடியாது என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது.
இருப்பினும், தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் விஜய்சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘டிரெய்ன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்குள் அனிருத் தனது திருமணப் பணிகளை முடித்துவிட்டு வந்து பின்னணி இசையமைத்துத் தருவார் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளதாம். அப்படி முடிவடையும் பட்சத்தில், ‘டிரெய்ன்’ திரைப்படம் வெளியாகும் அனைத்துத் திரையரங்குகளிலும் ‘அரசன்’ படத்தின் பிரம்மாண்ட ப்ரோமோ திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.
அதேவேளையில், இந்தத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கவிருக்கும் தனது அடுத்த புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் எஸ்டிஆர் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
- Advertisement -
