அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம் படத்தின் திரைவிமர்சனம்அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள பாம் திரைப்படம் இன்று (செப்டம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் காளி வெங்கட், சிவாத்மிகா, அபிராமி, நாசர், சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். டி. இமான் இதற்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
காளக்கண்மாய்பட்டி எனும் கிராமம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. பகை, வெட்டுக்குத்து என பிரிந்து கிடக்கும் இந்த கிராமத்தை ஒன்று சேர்க்க காளி வெங்கட் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகிய இருவரும் போராடுகிறார்கள். அதே சமயத்தில் காளி வெங்கட் திடீரென இறந்துவிட, அவருடைய உடலை அர்ஜுன் தாஸை தவிர வேறு யாராலும் தூக்க முடிவதில்லை. இதற்கிடையில் அவர் இறக்கவில்லை என அர்ஜுன் தாஸ் கூறுகிறார். ஆகையினால் ஒட்டுமொத்த கிராமமே காளி வெங்கட் இறந்துவிட்டாரா? இல்லையா? என்ற சந்தேகத்தில் இருக்க, அவர் மீது சாமி இறங்கி விட்டதாக ஊர் பூசாரி சொல்கிறார். அதன் பிறகு இந்த சாமி யாருக்கு சொந்தம்? என்று ஒரு பூகம்பம் வெடிக்கிறது. இதன்பிறகு என்ன நடந்தது என்பதை கலகலப்பான திரைக் கதையில் கூறியுள்ளனர்.

இதுவரை முரட்டுத்தனமாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் அப்பாவியாக நடித்துள்ளார். மேலும் வழக்கம் போல் காளி வெங்கட் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். நாசர், அபிராமி, சிங்கம்புலி, சிவாத்மிகா ஆகியோரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர். இது தவிர இயக்குனர் விஷால் வெங்கட் இந்த படத்தின் மூலம் சொல்ல வேண்டியதை பாராட்டும் விதமாக சொல்லியிருக்கிறார். சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும், கதை கலகலப்பாக நகர்வதால் அது பெரிய அளவில் மைனஸ் ஆக தெரியவில்லை. இருப்பினும் பிணத்தை தாண்டி கதையில் சுவாரஸ்யம் வேறு எதுவும் இல்லாததால் படம் கொஞ்சம் சலிப்பை தருகிறது. இயக்குனர் வித்தியாசமான கதையில் ரசிகர்களை ரசிக்க வைத்தாலும், படம் முழுவதும் ரசிகர்களை போய் சேரவில்லை. மொத்தத்தில் குடும்பத்துடன் ஒருமுறை சென்று பார்க்க வேண்டிய படம்தான் பாம்.