இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் , தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோரின் கூட்டணியில் மாமன்னன் என்ற திரைப்படத்தையும் இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். இவருடைய படங்களில் சமூகத்தில் சொல்லத் தயங்கும் விஷயங்கள் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும். தொடர் வெற்றி படங்களை இயக்கி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் மாரி செல்வராஜ் நான்காவதாக வாழை என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படம் நேற்று (ஆகஸ்ட் 23) திரைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பாகவே இதன் பிரத்யேக காட்சிகளை பார்த்த மணிரத்னம், பாலா போன்ற இயக்குனர்கள் மாரி செல்வராஜையும் வாழை திரைப்படத்தையும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் வாழை திரைப்படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.
அதன்படி, “சத்யஜித் ரே, ஷியாம் பெனகல் படங்களை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். அந்த மாதிரியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ இன்று ஆதங்கப்பட்டு இருக்கிறேன். ஆனால் இவர்களையெல்லாம் மிஞ்சுகிற வகையில் என் நண்பன் மாறி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் இயக்கியிருக்கிறான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்வேன். சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பார்த்து யோசித்தது உண்டு. வாழை திரைப்படம் அப்படியான ஒரு படம். படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்துள்ளார் மாரி செல்வராஜ். மண்ணில் இருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்” என்று பாராட்டியுள்ளார்.