சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்தப் படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி இருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு எதிராக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது வேட்டையன் படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காந்தி நகர் அரசு பள்ளி குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் கோவில்பட்டி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வேட்டையன் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி ஒன்றில்
செய்தி வாசிப்பாளர், கோவில்பட்டி காந்திநகர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியின் ஆசிரியர் ஒருவரை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்ததாக செய்திகள் வாசிக்கப்பட்டிருக்கும். இதுதான் கோவில்பட்டி மக்களின் எதிர்ப்புக்கு காரணம். ஏனென்றால் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி மிகவும் பிரபலமான பள்ளியாகும். இந்த நிலையில் அந்த பள்ளி குறித்து அவதூறான காட்சி இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோவில்பட்டி மக்கள் வேட்டையன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைக் கடந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். எனவே இது தொடர்பாக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து, “வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட இருப்பதாக ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் அனைவரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஆரம்பத்தில் அந்த பள்ளி நடுநிலைப் பள்ளியாக இருந்தது. நான் அமைச்சராக இருந்தபோது அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினேன். கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறேன். இது பல்வேறு விருதுகளை வென்ற சிறப்பான பள்ளி. 100 தேர்ச்சி பெறும் பள்ளி. அப்படிப்பட்ட பள்ளியை குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியினால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி தமிழ் குமரனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து இருக்கிறேன். அந்த காட்சியை அவர்கள் விரைவில் நீக்குவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். இன்றைக்குள் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிடில் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் தொடரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.