தமிழ் சினிமாவில் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ், ‘ராயன்’ படத்திற்கு பிறகு ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து இருக்கிறார். இந்த படம் தனுஷின் 52 வது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே, பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 14) சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் தனுஷ், ராஜ்கிரண், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், நித்யா மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது தனுஷ், அருண் விஜயை ரத்தம் வரும் அளவிற்கு குத்தியதாக கூறியுள்ளார். “இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் சண்டைக்காட்சியின் போது அருண் விஜயை குத்தும்போது தவறுதலாக என்னுடைய கை அவர் வாயில் பட்டு ரத்தம் வந்துவிட்டது. அவர் அதன் பிறகு ஐஸ் கட்டியை வைத்துக்கொண்டு ஷாட் போகலாம் என்று உடனே வந்து விட்டார். வேறு யாராவது இருந்திருந்தால் இரண்டு மணி நேரம் படப்பிடிப்பே நின்று போயிருக்கும்” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.
- Advertisement -


