நடிகர் தனுஷ், குபேரா படத்தில் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷின் 51வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் குபேரா. இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் 2025 பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ், பாடல் ஒன்றை பாடியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் தான் இந்த பாடல் சென்னையில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் நடிகர் தனுஷ் பாடுவது இதுவே முதல் முறையாகும். எனவே இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அடுத்தது இந்த பாடல் குபேரா படத்தின் அறிமுக பாடலாக இருக்கும் எனவும் இது பக்தி பாடலாக இருக்கும் எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இந்த பாடல் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.