நீயா பட இயக்குநர் மறைவு… திரையுலகினர் இரங்கல்…
- Advertisement -
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பசி துரை காலமானார்.

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குநர் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கமல் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற நீயா மற்றும் ரஜினிகாந்த் நடித்த ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை, கிளிஞ்சல்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கினார் துரை. இதில் அவர் இயக்கத்தில் வெளியான அவளும் பெண்தானே, பசி போன்ற படங்களுக்காக தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றிருக்கிறார்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் இவர் படங்களை இயக்கி உள்ளார். பெண்களை மையப்படுத்தி இவர் இயக்கிய படங்களுக்கு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 58-வது தேசிய திரைப்பட விருது விழாவின் நடுவர் குழுவிலும் அவர் உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். இவரின் இயற்பெயர் செல்லதுரை. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
92 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று கொடைக்கானலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.