துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் துல்கர் சல்மான். இருப்பினும் கடந்த 2022ல் வெளியான சீதாராமம் திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. கடைசியாக இவரது நடிப்பில் கிங் ஆப் கொத்தா எனும் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக இவர் காந்தா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். இந்த படத்தை வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. எனவே படமானது திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதாவது ஏற்கனவே இப்படம் செப்டம்பர் 27-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் செப்டம்பர் 7ல் வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு சிறந்ததை வழங்க வேண்டும் எனவும், தரத்தில் குறைவில்லாமல் பான் அளவில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் படக்குழுவுக்கு இன்னும் சில நாட்கள் தேவை படுவதால் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வெளியீட்டை அக்டோபர் 31 தீபாவளி தினத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.