நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் மீதம் 20 சதவீத படப்பிடிப்புகள் விரைவில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பூஜை உடன் தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த படம் ஏ ஆர் முருகதாஸின் கத்தி, துப்பாக்கி படங்களை போன்று ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மலையாளத்தில் ஐயப்பனும் கோஷியும் போன்ற படங்களில் நடித்திருந்த பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளாராம். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஜு மேனன் ஏற்கனவே தமிழில் வெளியான மஜா, தம்பி, பழனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.