பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாதது உணவு. ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளை பெருமைப்படுத்தும் விதமாக சென்னையில் “உழவர் விருதுகள் 2024” விழா சிறப்பாக நடைபெற்றது. உழவர் பவுண்டேஷன் அமைப்பின் முன்னெடுப்பில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, சிவகுமார், ரோகிணி, தம்பி ராமையா, பசுபதி, கீர்த்தி பாண்டியன், மருத்துவர் கு.சிவராமன் போன்றோர் கலந்து கொண்டனர். விவசாயத் துறை சார்ந்த மாணவர்கள், ஆர்வலர்கள் என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்வரும் ஐந்து நபர்களுக்கு இந்த விழாவில் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மதுரை திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்-திரு வெங்கடேஷ், விவசாயிகளைப் பற்றி எழுதி வரும் எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன், தரிசு நிலத்தை பெண்கள் கூடி விளைநிலமாக முன்னெடுத்ததற்கு பள்ளுர் நிலமற்ற விவசாய பெண்கள் சங்கத்திற்கு சிறந்த கூட்டமைப்புக்கான விருதும், பழங்குடி சமூக விவசாயிகளுக்காக போராடும் ராஜலட்சுமி, நீர்நிலைகளை சுத்திகரித்து மீட்டெடுத்த சித்திரவேல் ஆகியோருக்கு உழவன் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலையும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை உழவன் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரான நடிகர் கார்த்தி வழங்கி விழாவையும் சிறப்பித்தார். அதைத் தொடர்ந்து விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் கார்த்தி.
- Advertisement -


