கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மம்மூட்டி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக ஜோஸ்வா இமைபோல் காக்க எனும் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முன்னதாக கௌதம் மேனன், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு சில காரணங்களால் இந்த படம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையில் கௌதம் மேனன் பல படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ஹிட்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். இவ்வாறு பிசியான இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் கௌதம் மேனன் தற்போது தனது தாய் மொழியான மலையாளத்தில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை நடிகர் மம்மூட்டி தனது மம்மூட்டி கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பதோடு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. அதே சமயம் இந்த படத்திற்கு மிஸ்டர் டிடக்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (செப்டம்பர் 7) காலை 10 மணி அளவில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.