சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் மஞ்சும்மெல் பாய்ஸ். கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்களில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடும் நிலையில் அவரை காப்பாற்ற உடன் இருக்கும் நண்பர்கள் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்? மேலும் நட்பின் ஆழம் என்ன? என்பதை எமோஷனலாக கூறியிருந்த திரைப்படம் தான் மஞ்சும்மெல் பாய்ஸ். மலையாளத்தில் வெளியான இந்த படம் கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் கமல்ஹாசன், ரஜினி, உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்ற பல நடிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதாவது இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் குணா படத்தில் இடம் பெறும் ‘கண்மணி அன்போடு காதலன்’ எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழு இளையராஜாவின் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி அவர் அனுப்பிய நோட்டீஸில், “பதிப்புரிமை சட்டப்படி இளையராஜா தான் அந்த பாடலுக்கு உரிமையாளர். பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும். அல்லது அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா ஏற்கனவே ரஜினியின் கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.