நடிகர் ஜெயம் ரவி, ஜீனி படம் குறித்து பேசி உள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் ஜெயம் ரவி ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் ஜீனி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி, வாபிகா கேபி, தேவயானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் மிஸ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அர்ஜுனன் இயக்கியிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி, ஜீனி படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “ஜீனி படம் எனது மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் பேண்டஸி மற்றும் எமோஷன் கலந்த கலவையாகும். இந்த படத்தில் காமெடி மற்றும் காதல் ஆகியவை வித்தியாசமான கோணத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தின் சுவாரசியமான கதைக்காக இந்த படம் பான் இந்தியா அளவில் ரசிகர்களை கவரும்” என்று தெரிவித்துள்ளார்.