நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற படங்கள் பலரின் பேவரைட் படங்கள் ஆகும். அடுத்ததாக இவருடைய நடிப்பில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதே சமயம் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருந்த பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தான் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை ஒன்றின் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார். இந்த தகவல் திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களுடைய பிரிவிற்கு யார் காரணம் என்று ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அந்த சமயத்தில் தான் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் இதனால்தான் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிகிறார் எனவும் செய்திகள் பரவத் தொடங்கியது. இது தொடர்பான செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.
மேலும் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜெயம் ரவி, தன்னுடைய மகன்கள் தான் தனது எதிர்காலம் என்றும் அவர்களை மீட்டெடுக்க போராடி வருவதாகவும் கூறியுள்ளார். அடுத்தது விவாகரத்து கிடைக்க பத்து ஆண்டுகள் ஆனாலும் சரி 20 ஆண்டுகள் ஆனாலும் சரி தனது மகன்களுக்காக போராட தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -