ஜெயம் ரவியின் ‘ஜீனி‘ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் கிடைக்கின்றது.
ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் இறைவன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில் அதைத்தொடர்ந்து பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் ஜெயம் ரவி, ஜீனி எனும் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி , தேவயானி, வாபிக்கா கேபி போன்றோர் நடிக்கின்றனர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இடம் உதவியாளராக பணிபுரிந்த அர்ஜுனன் இயக்குகிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
தற்போது இரண்டு பாடல்களைத் தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும் 2024 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.