நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியன் 2, கல்கி 2898AD, தக் லைஃப் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் குணா திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷல் ஆக கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் குணா. கமலஹாசனின் அசுரத்தனமான நடிப்பிற்கு தீனி போடும் விதமாக அமைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையும் படத்திற்கு பெரும் பலம் அளித்தது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் வசூல் ரீதியாக இப்படம் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் இன்றுவரை சினிமா ரசிகர்களுக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான ஒரு படமாக இப்படம் இருந்து வருகிறது. சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூலை ஈட்டி இருந்தது. அப்படத்தின் கதையும் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குணா திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. அதன்படி இந்த படம் 2024 ஜூன் 21 அன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அன்று போல் இன்றும் இந்த படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -