இயக்குனர் சிறுத்தை சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் வீரம், வேதாளம் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தாலும் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகர் சூர்யாவிற்காக தரமான கதையை தயார் செய்து கங்குவா எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரம்மாண்டமாகவும் உருவாகி இருக்கும் இந்த படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அடுத்தது இந்த படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “கங்குவா இரண்டாவது ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும். அதில் சூர்யாவின் பிரான்சிஸ் கதாபாத்திரம் இடம்பெறும். கங்குவா படத்தில் பிளாட் மற்றும் எமோஷன் மிகப்பெரியது. அதனால்தான் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இரண்டாம் பாகத்திற்கான திட்டமும் தயாராகிவிட்டது. கங்குவா முதல் பாகத்தினை நான் 2 மணி நேரம் 45 நிமிடங்களாக தான் படமாக்கினேன். ஆனால் அது இப்போது இரண்டு மணி நேரம் 32 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு காவிய திரைப்படத்திற்கான நேரம். பார்வையாளர்களும் ரசிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -