விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கோலார் வயலில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது என்பது குறித்தும் தமிழர்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது குறித்தும் பேசி இருந்தது இந்த தங்கலான் படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. அதே சமயம் இந்த படத்திற்கு பல எதிர்ப்புகளும் கிளம்பின. அதாவது இந்த படத்தில் புத்த மதத்தை உயர்வாகவும் வைணவ மதத்தை தாழ்வாகவும் பிரதிபலிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததாகவும், இதனை ஓடிடியில் வெளியிட்டால் இரு பிரிவினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் எனவும், எனவே இதன் ஓடிடி ரிலீஸை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு திருவள்ளுவரை சேர்ந்த பொற்கொடி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த படம் ஓடிடியில் வெளியாக எந்த தடையும் இல்லை என நேற்று (அக்டோபர் 21) தீர்ப்பு வழங்கியது. இந்த தகவல் படக் குழுவினருக்கு மகிழ்ச்சி தந்த நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.