கார்த்தியின் வா வாத்தியார் பட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கார்த்தியின் 26ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் வா வாத்தியார். இந்தப் படத்தை சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். ஜார்ஜ்.சி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்தப் படத்தில் கார்த்தி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடிக்க, அவருடன் இணைந்து ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி, ஆனந்தராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ் இதில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் படமானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2023ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி ஏறத்தாழ இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், இந்த படத்தின் பேட்ச் ஒர்க் பணிகள் தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படப்பிடிப்பு ஒரு வாரம் நடைபெறும் என்றும், படம் பற்றிய கூடுதல் அப்டேட்டுகள் மிக விரைவில் வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


